சென்னை: தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அமைச்சரவையில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்(ஐயுஎம்எல்) இடம் பெற்றிருக்கிறது. இப்படி இருக்கையில், அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்பதால்தான் தவெகவை ஆதரித்தோமா? என்பது குறித்து முஸ்லிம் லீக்கின் தலைவர் காதர் மொய்தீன் விளக்கமளித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில், திமுக மற்றும் அதிமுகவை ஓரம் கட்டி தவெக பெரிய கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால், திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் விஜய்க்கு ஆதரவு கொடுத்திருந்தன.
இப்படி ஆதரவு கொடுத்த காங்கிரஸ், விசிக மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஐயுஎம்எல் சார்பில் ஷாஜகான், சிறுபான்மை நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறார். இதில் இடதுசாரிகள் மட்டும்தான் அமைச்சரவையில் இடம் பெறாமல் இருக்கின்றனர். இந்நிலையில், அமைச்சர் பதவிக்காகத்தான் தவெகவுக்கு திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவளித்துள்ளன என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது குறித்து ஐயுஎம்எல் தலைவர் காதர் மொய்தீன் விளக்கமளித்துள்ளார். தென்காசி மாவட்டம், புளியங்குடியில் கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் பங்கேற்று பேசிய அவர், "அமைச்சரவையில் இடம் என்கிற எந்த எதிர்பார்ப்புடனும் நாங்கள் தவெகவுக்கு ஆதரவளிக்கவில்லை. தமிழக மக்களின் ஒன்றுபட்ட முடிவு மற்றும் இஸ்லாமிய சமூதாய மக்கள், அனைத்து உலமாக்கள், அனைத்து காஜிமார்கள், அனைத்து ஜமாத்தில் உள்ள பெரியவர்கள் வலியுறுத்தலின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத போதும், எங்களை அழைத்து அமைச்சரவையில் இடம்பெற செய்த முதலமைச்சருக்கு நன்றி. அமைச்சரவையில் முஸ்லிம் லீக் இணைந்ததால்தான் அமைச்சரவையே முழுமை பெற்றது என்று முதலமைச்சர் என்னிடம் கூறினார். இப்படியாக இஸ்லாமிய சமுதாயத்தின் மீது மதிப்பும், மரியாதையும் கொண்ட ஆட்சி தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியில், இஸ்லாமிய சமுதாய மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். இதற்கு இஸ்லாமிய சமூக மக்கள் ஒன்று திரண்டு ஆதரவு கொடுக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.