சென்னை: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாத இறுதியில் பணி ஓய்வு பெற இருந்த நிலையில் ஜெ.ராதாகிருஷ்ணன் இந்த பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 1999 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த மூன்று மாதங்களாக இந்த ஆணையத்தில் எவ்வித உறுப்பினர்களும் இன்றி இருந்த நிலையில் தற்போது இதன் தலைவராக, ஜெ.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் மின் பகிர்மான கழக இயக்குநர் ஏ.ஆர். மாஸ்கர்னஸ் உறுப்பினராகவும், ஏ. முத்துசாரதா சட்ட உறுப்பினராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சட்ட உறுப்பினராக இருந்த மோகன் கடந்த மார்ச் 9 ஆம் தேதி ஓய்வு பெற்றார். உறுப்பினர் வெங்கடேசன் கடந்த ஜூன் 1 ஆம் தேதி தனது பதவி காலத்தை நிறைவு செய்தார். கடந்த ஜூன் 2ம் தேதி முதல் ஆணையத்தின் ஒரே அதிகாரியாக செயல்பட்டு வந்த மணிவண்ணன் கடந்த ஜூன் 19 ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அவரது ராஜினாமா கடிதம் கடந்த ஜூன் 24ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்தது. ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டீக்காராமன் தலைமையில் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி இந்தக் குழு கூடியது. பின்னர் ஒவ்வொரு உறுப்பினர் பதவிக்கும் இரண்டு பேர் கொண்ட பட்டியலை அரசுக்கு பரிந்துரைத்தது. இந்நிலையில் தற்போது அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் கூடுதல் தலைமைச் செயலாளராகவும், பயிற்சித் துறை தலைவராகவும் பணியாற்றி வரும் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மின்சாரக் கட்டணங்களை நிர்ணயம் செய்தல், மின் கொள்முதல் மற்றும் மின் கடத்தல் கட்டணங்களை முறைப்படுத்துதல் ஆகிய பணிகளோடு, மின்சாரத் துறைக்கான விதிகளை உருவாக்குதல் மற்றும் அது தொடர்பான வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பு வழங்குதல் ஆகியவற்றையும் இந்த ஆணையம் செய்கிறது. இதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், 5 ஆண்டுகளுக்கு இந்த பதவியை வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள ராதாகிருஷ்ணன், மின் வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் தலைமை இயக்குநராக உள்ள அவர், இந்த மாத இறுதியில் பணி ஓய்வு பெறவிருந்த நிலையில், தற்போது மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.