சென்னை: உலகம் முழுவதும் இன்று வெளியாகிறது ரஜினிகாந்த்தின் 'ஜெயிலர் 2' திரைப்படம். கேரளா, கர்நாடகாவில் இன்று காலை 6 மணிக்கு திரையரங்குகளில் வெளியானது 'ஜெயிலர் 2'. தமிழ்நாட்டில் இன்று காலை 9 மணிக்கு ஜெயிலர் 2 முதல் காட்சி திரையிடப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர் 2' இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன், ரித்விக், சுஜித் சங்கர், மோகன் லால், சிவராஜ்குமார், ஹிருத்திக் ரோஷன், விஜய் சேதுபதி, பூர்ணா, வசந்த் ரவி, சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜெயிலர் 2'. இந்த திரைப்படம் இன்று (அக்.15) உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. ஜெயிலர் 2 திரையிடப்படும் தியேட்டர்களில் ரசிகர்கள் மன்றத்தின் சார்பில் பிரம்மாண்டமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் இடம்பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் உருவப்படத்திற்கு ரசிகர்கள் பாலபிஷேகம் செய்து உற்சாகமடைந்தனர். 'ஜெயிலர் 2' திரைப்படம் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் இன்று வெளியாகிறது. வட இந்தியாவில் மட்டும் 1,000- க்கும் மேற்பட்ட திரைகளில் 'ஜெயிலர் 2' திரைப்படம் வெளியாகவுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள், ரஜினி ரசிகர்கள், மன்றத்தினர், 'ஜெயிலர் 2' திரைப்படத்தைக் காணத் தயாராகி வருகின்றனர். குறிப்பாக, தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளம் மாநிலத்தில் 756 திரைகளில் இப்படம் வெளியாகியுள்ளது. கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இன்று காலை 6 மணிக்கே 'ஜெயிலர் 2' படத்தின் முதல் காட்சி தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள திரையரங்குகளில் முதல் ஷோ பார்க்கக் குவிந்துள்ளனர்.