சென்னை: விஜ்ய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் இன்று வெளியானதை ஒட்டி, பட்ஜெட் தொடர்பான துறை ரீதியான ஆய்வுக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சர் விஜய் உட்பட பல அமைச்சர்கள் வராததால் இன்று தலைமைச் செயலகம் வெறிச்சோடியுள்ளது.
தவெக தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய் நடித்த கடைசி படமான ஜனநாயகன் இன்று தமிழ்நாட்டில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமைச்சர்கள் திரையரங்குகளுக்குச் சென்று ஜனநாயகன் திரைப்படத்தைப் பார்த்து ரசித்து வருகின்றனர். அதுதொடர்பான புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அமைச்சரும், தவெக பொதுச் செயலாளருமான என். ஆனந்த், சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜுடன் இணைந்து சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் ஜனநாயகன் திரைப்படத்தைப் பார்த்துள்ளார். மேலும் இருவரும் இணைந்து எடுத்த செல்பி புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அதேபோல், புதுக்கோட்டையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் ஜனநாயகன் திரைப்படத்தைப் பார்த்தபோது அவர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் வடித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும், அமைச்சர்கள் ஜெயஸ்ரீ, ஜெகதீஸ்வரி உள்ளிட்டோரும் பல்வேறு திரையரங்குகளுக்குச் சென்று திரைப்படத்தைப் பார்த்துள்ளனர். இதுபோல் பல அமைச்சர்கள் தாங்கள் ஜனநாயகன் திரைப்படத்தைப் பார்த்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். அமைச்சர்கள் மட்டுமல்லாது எம்.எல்.ஏக்கள் பலரும் ஆங்காங்கே தியேட்டர்களில் 'ஜனநாயகன்' படம் பார்த்து வருகின்றனர். குறிப்பாக எம்.எல்.ஏ. பல்லவி கைக்குழந்தையுடன் ஜனநாயகன் படம் பார்க்க தியேட்டருக்குச் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் ஜோசப் விஜய், தலைமைச் செயலகத்துக்கு வந்து அலுவல் பணிகளை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அவரது நடிப்பில் உருவான ஜனநாயகன் படம் இன்று வெளியான நிலையில் அவரும் இன்று தலைமைச் செயலகத்துக்கு வரவில்லை. வழக்கமாக மக்கள் மற்றும் அதிகாரிகளின் வருகையால் பரபரப்பாகக் காணப்படும் தலைமைச் செயலகம் இன்று வெறிச்சோடி இருந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று மாலை முதலமைச்சர், தலைமைச் செயலாளர், அவரது தனிச் செயலாளர்கள் மற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் குடும்பத்தினருடன் அடையாறில் உள்ள பிரிவியூ தியேட்டரில் ஜனநாயகன் திரைப்படத்தைப் பார்த்தனர். இந்நிலையில், முதல்வர் விஜய், அமைச்சர்கள் என பலரும் தலைமைச் செயலகத்துக்கு வராதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. டெல்லியில் நீட் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானும் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டிலும் நீட் முறைகேடு மற்றும் கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளை சீர்செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாணவர்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் துறை வாரியாக ஆலோசனை நடத்தி வந்தார் முதல்வர் விஜய். அந்தக் கூட்டங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது விமர்சனங்களை கிளப்பிவிட்டுள்ளது. விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்பட ரிலீசுக்காக அரசு இயந்திரமே முடங்கி உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.தியேட்டர்களில் அமைச்சர்கள்
தலைமை செயலகத்தில் விஜய் ஆப்செண்ட்
வெறிச்சோடிய தலைமைச் செயலகம்
அரசு இயந்திரமே முடங்கியதா?