மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு

  • சென்னை: மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். சென்னை மண்ணடியில் நடைபெற்ற கருணாநிதி பிறந்தநாள் விழாவில் பேசிய அவர், மக்கள் விளம்பர அரசியலை விரும்பவில்லை, செயல்படும் நிர்வாகத்தையே விரும்புகிறார்கள் என்றும் கூறினார்.

    Advertisement

    சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் விழா மண்ணடி தம்பு செட்டி தெருவில் நடைபெற்றது. துறைமுகம் கிழக்கு பகுதி திமுக செயலாளர் எஸ். ராஜசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே. சேகர்பாபு முன்னிலை வகித்தார்.

    Advertisement

    ஏமாற்றமே மிஞ்சியுள்ளது

    இந்த நிகழ்ச்சியில் பேசிய மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா மாற்றம் வேண்டும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாக கூறினார். அவர் கூறியதாவது:-

    "மாற்றம் வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பை முன்வைத்து தற்போதைய ஆட்சி உருவானது. ஆனால் அந்த மாற்றம் மக்களின் வாழ்க்கையில் பிரதிபலித்ததா என்றால் இல்லை. மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது என்ற மனநிலையே தற்போது காணப்படுகிறது.

    சினிமாவில் வசனங்கள் பேசுவது எளிதான விஷயம். ஆனால் ஒரு அரசை நிர்வகிக்க பொறுப்புணர்வு, அனுபவம், திட்டமிடல் திறன் மற்றும் மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் பக்குவம் ஆகியவை மிகவும் அவசியமானவை. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வராக இருந்த காலத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று மக்களை சந்தித்தார்.

    Advertisement

    "நீட் விவகாரத்தில் என்ன நிலைப்பாடு"

    அவர்களின் பிரச்சினைகளை நேரடியாக கேட்டறிந்து, தீர்வு காண முயற்சிகளை மேற்கொண்டார். குறிப்பாக நீட் தேர்வு தொடர்பாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. நீட் தேர்வை எதிர்த்து மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக போராடியது. ஆனால் தற்போதைய ஆட்சி இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது இன்னும் தெளிவாகவில்லை.

    தமிழக மக்கள் தற்போதைய ஆட்சியாளர்களிடம் இருந்து விளம்பர அரசியலை அல்ல, செயல்படும் நிர்வாகத்தையே எதிர்பார்க்கிறார்கள். வசன அரசியல் வேண்டாம், மக்கள் நல அரசியல் வேண்டும். பிம்ப அரசியல் வேண்டாம், பொறுப்பான நிர்வாகம் வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது.

    Advertisement

    மக்கள் விரும்பும் ஆட்சி திமுக

    வர இருக்கும் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் மக்கள் தங்களது ஜனநாயக உரிமையை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும். மக்கள் விரும்பும் ஆட்சி திமுக தலைமையிலான ஆட்சிதான் என்பதை எடுத்துரைக்கும் வகையில் அனைவரும் செயல்பட வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.

    இந்கழ்ச்சியில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் எ.வ. வேலு எம்எல்ஏ, ஊடகவியலாளர் செந்தில்வேல் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். மேலும் மேயர் பிரியா ராஜன் மற்றும் திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி திமுகவின் சின்னத்திலேயே போட்டியிட்டது. நாகப்பட்டினம் மற்றும் மணப்பாறை ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், அக்கட்சி போட்டியிட்ட எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. 2 தொகுதிகளிலும் தோல்வியுற்றது. இதற்கு முன்பு நடந்த 2011 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியின் கீழ் போட்டியிட்டு நாகப்பட்டினம் மற்றும் மணப்பாறை ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Jawahirullah, Manithaneya Makkal Katchi leader said people who voted for change are now disappointed with the present government. Speaking at a DMK event in Chennai, he stressed the need for effective governance and questioned the administration’s approach on key issues including NEET.