எங்களுக்கு வேலை இல்லையா? - விளம்பர வீடியோவுக்காக மக்களை காத்திருக்க வைத்த விஜய்! ஜெயகுமார் கண்டனம்


  • சென்னை: 300 பேருந்துகள் தொடக்கவிழாவில் ஒரு பேருந்தில் பயணம் செய்த போது அவ்வழியாக போக்குவரத்தை அரை மணி நேரம் காத்திருக்க வைத்து வீடியோ எடுப்பதா என முதல்வர் விஜய்க்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: முதல்வரும் - மூன்று நாட்கள் காத்திருந்த 300 பேருந்துகளும்!!
    முதல்வரின் பிறந்தநாள் அன்று சென்னையில் புதிதாக 300 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவித்து தொடக்க விழாவிற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்துகள் வரவழைக்கப்பட்டன.

    Advertisement

    ஆனால், கடந்த மூன்று நாட்களாக நிகழ்ச்சி நடைபெறாததால் 300 பேருந்துகளும் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் கிட்டத்தட்ட 900 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் 3 நாட்கள் உணவு மற்றும் இருப்பிட வசதி இல்லாமல் சிரமப்பட்டதாக செய்திகள் வருகின்றன.

    இது மட்டுமில்லாமல், ஏற்கனவே தாமதமான நிகழ்ச்சியை விரைந்து முடிக்காமல் முதல்வர் பேருந்தில் ஏறி வீடியோ எடுக்க, வெளியில் சுமார் 30 நிமிடங்கள் கடற்கரை சாலையில் பாதுகாப்பு நடவடிக்கை என்று மக்கள் நிறுத்தி வைக்கப்பட்டனர்.

    மேலும், "ஏன் எங்களுக்கெல்லாம் வேலை இல்லையா?" என்று காவலரிடம் ஒருவர் கேட்டது ஊடகத்தில் வெளியாகி உள்ளது.

    Advertisement

    இந்த கேள்வி "காவலருக்கானது மட்டும் அல்ல! முதல்வருக்கானது!" இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    இந்த பேருந்து தொடக்கம் குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ரூ.127.21 கோடியில் கொள்முதல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் 300 புதிய பேருந்துகளின் சேவை தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்கள்.

    தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் இன்று (25.6.2026) தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத் துறை சார்பில் 127 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் 300 புதிய பேருந்துகளின் சேவையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்கள்.

    Advertisement

    தமிழ்நாடு அரசு, 8 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் வாயிலாக, கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், வணிகம், சமூக மற்றும் பிற தேவைகளுக்காக மக்களுக்குக் குறைந்த கட்டணத்தில் பொதுப் போக்குவரத்துச் சேவைகளை வழங்கி வருகிறது. இப்போக்குவரத்துக் கழகங்களின் 26 மண்டலங்கள் மற்றும் 317 பணிமனைகளின் வாயிலாக இயக்கப்படும் சுமார் 21,527 பேருந்துகளின் மூலம் தினசரி சுமார் 2.05 கோடி பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இதில் சுமார் 64 சதவீதம் பேர் மகளிர், மாணவர்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், விடுதலைப் போராட்ட வீரர்கள், கலைமாமணி விருதாளர்கள், பிற தகுதிவாய்ந்த பயனாளிகள் கட்டணமில்லா பயணச் சலுகையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

    Advertisement

    பொதுமக்களின் தேவைக்கேற்ப புதிய வழித்தடங்களை அறிமுகப்படுத்துதல், முன்பு நிறுத்தப்பட்ட பகுதிகளில் மீண்டும் பேருந்து சேவைகளை இயக்குதல், பழைய பேருந்துகளை மாற்றுதல், பணிமனைகள் மற்றும் பயணிகள் வசதிகளை மேம்படுத்துதல், வாகனங்களின் தகுதி மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துதல், தொழில்நுட்ப அடிப்படையிலான பயணிகளின் சேவைகளை விரிவுபடுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

    தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் 17.06.2026 அன்று நடைபெற்ற போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தின்போது, போக்குவரத்துத் துறையை சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மாசற்ற, நவீன, தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய, பாதுகாப்பான மற்றும் பயணிகள் பயன்பெறும் வகையிலான பொதுப் போக்குவரத்து அமைப்பாக மேம்படுத்த வேண்டும் என்றும், ஸ்மார்ட் கார்டு அடிப்படையிலான முறையின் மூலம் டிஜிட்டல் கட்டண வசூல், GPS / Vehicle Location Tracking, பயணிகள் தகவல் அமைப்புகள், பேருந்து நிலையங்களில் 24x7 பயணிகள் உதவி மையங்கள் போன்றவற்றை ஏற்படுத்த வேண்டும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

    Advertisement

    அதன்படி, பொதுப் போக்குவரத்து சேவைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு 65 பேருந்துகள், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்திற்கு 36 பேருந்துகள், சேலம் கோட்டத்திற்கு 39 பேருந்துகள், கோயம்புத்தூர் கோட்டத்திற்கு 25 பேருந்துகள், கும்பகோணம் கோட்டத்திற்கு 49 பேருந்துகள், மதுரை கோட்டத்திற்கு 42 பேருந்துகள் மற்றும் திருநெல்வேலி கோட்டத்திற்கு 44 பேருந்துகள் என மொத்தம் 300 புதிய பேருந்துகளின் சேவையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்கள்.

    இப்பேருந்துகளில் 164 டீசல் பேருந்துகளும், BS VI இணக்கமான, குறைந்த மாசு உமிழ்வு கொண்ட சுற்றுச்சூழலுக்கு ஏற்ற 136 CNG பேருந்துகளும் அடங்கும். இப்புதிய பேருந்துகள் நகர மற்றும் புறநகர் பேருந்து சேவைகளை வலுப்படுத்தி, பயணிகளுக்கான தொடர் சேவையை மேம்படுத்தி, பயணிகள் காத்திருப்பு நேரத்தைக் குறைத்து, பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்திற்கு வகைசெய்யும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    English Summary

    Former minister Jayakumar questioned Chief Minister Vijay over allegedly halting traffic for nearly 30 minutes to record a video while traveling in a bus during the launch event of 300 buses.