சென்னை: சர்ச்சைக்குரிய கருத்துகளை பேச வேண்டாம், கண்ணியம், கவுரவத்தை காப்பாற்றுங்கள் என தவெக எம்எல்ஏவுக்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவுரை வழங்கினார்.
தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்றைய தினம் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் சட்டசபையில் அமைச்சர் அருண்ராஜால் கொண்டு வரப்பட்டது.
அது போல் மத்திய அரசின் FCRA திருத்த மசோதாவுக்கும் எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் சூலூர் தவெக எம்எல்ஏ சுகுமார் பேசினார். அப்போது அவர் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மக்கள் மனதில் இருந்திருந்தால் சட்டசபைக்குள் வந்திருப்பார் என ஸ்டாலினின் தோல்வி குறித்து பேசியிருந்தார். இதனால் கோபமடைந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், "சுகுமார் எம்எல்ஏ கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமியுடன் இருந்தார். ஸ்டாலின் 1.31 கோடி மக்களின் மனதில் குடியிருக்கிறார்" என பதிலடி கொடுத்தார். இந்த வாக்குவாதங்களை கவனித்த சபாநாயகர் ஜேடிசி பிரபாகர், இரு தரப்பையும் அமைதிப்படுத்திவிட்டு, தவெக எம்எல்ஏ சுகுமாரை நோக்கி, "எப்போதும் சட்டசபையில் பேசும் போது சர்ச்சைக்குரிய கருத்துகளை தவிர்த்துவிட வேண்டும். நீங்கள் மிகப் பெரிய திராவிட பின்புலம் கொண்ட பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்தவர். அந்த கண்ணியத்தையும் கவுரவத்தையும் காப்பாற்றும் வகையில் நீங்கள் தொடர்ந்து பேச வேண்டும்" என அறிவுறுத்தியிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டசபை கூடிய போது, குட்டி ஸ்டோரி மூலம் ஸ்டாலினின் கொளத்தூர் தோல்வி குறித்து முதல்வர் விஜய் கேலி செய்து பேசினார். அப்போது அவர் கதையில் பெரியவர் ஒருவரிடம் குட்டி பையன், என்ன தேடுகிறீர்கள் என கேட்டதற்கு, அந்த பெரியவர், "இல்ல உங்கப்பாவை காணோம், அதான் தேடுகிறேன்" என தெரிவித்திருந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். வெற்றி, தோல்வி என்பது அரசியல் கட்சிகளுக்கு சகஜம்தான் என்றாலும் இது போன்ற கிண்டல்களை தவிர்ப்பது நல்லது என பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.