சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் வீசிய மதச்சாயம்.. கருக்கலைப்புக்கு எதிராக பேசுவதா? கொதிக்கும் சிபிஐ

  • சென்னை: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரின் பேச்சு மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கெதிராக சிபிஐ கட்சி தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளது.. பெண்களின் கருக்கலைப்பு உரிமைக்கு எதிராக சபாநாயகர் பேசியதற்கு அக்கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.. தமிழகத்தில் இப்படி மதரீதியான அரசியல் சர்ச்சைகள் அடுத்தடுத்து சூடுபிடித்து வருவது, தவெக அரசுக்கு, மிகப்பெரிய அரசியல் நெருக்கடியை உருவாக்கியுள்ளன.

    Advertisement

    சமீபத்தில் மயிலாப்பூர் கத்தோலிக்க பேராயமும், "சாரிஸ் இந்தியா" அமைப்பும் இணைந்து நடத்திய "வாழ்க்கையை ஆதரிப்போம்" பேரணியில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பங்கேற்றிருந்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது.

    Advertisement

    பெண்களுக்கு கருக்கலைப்பு

    அந்த நிகழ்வில் பேசிய சபாநாயகர் பிரபாகர், பெண்களுக்குக் கருக்கலைப்பு செய்ய உரிமையில்லை என்றும், கருவுற்ற கணத்திலிருந்து பெண்ணின் வயிற்றில் வளரும் உயிருக்கு தனி உரிமை உள்ளது என்றும் பேசியிருந்தார். அரசியலமைப்பு சட்டத்தின் மிக முக்கிய பதவியில் இருக்கும் ஒருவரின் இந்த பேச்சு, தமிழக அரசியலிலும், சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் அதிர்வலையை உண்டுபண்ணி உள்ளது.

    சபாநாயகரின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தற்போது கண்டனக் குரலும் எழுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சபாநாயகரின் இந்த கருத்துக்கு மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

    Advertisement

    சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்

    அவர் தனது அறிக்கையில், "கருக்கலைப்பு அல்லது பிரசவம் போன்ற பெண்களின் உடல் மற்றும் மகப்பேறு தொடர்பான உரிமைகள் மதக் கோட்பாடுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படக் கூடாது. ஒரு ஜனநாயக நாட்டில் அரசியலமைப்புச் சட்டப் பதவியில் இருப்பவர்கள் மதச்சார்பற்ற கொள்கையையும், அறிவியல் ரீதியான தொலைநோக்குக் கண்ணோட்டத்தையும் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

    கருக்கலைப்புக்கு எதிராக பேசுவதும், பெண்களுக்கு அதற்கு உரிமையே இல்லை எனக் கூறுவதும் முழுக்க முழுக்க பெண்களின் உடல்நலம், மனநலம் மற்றும் அவர்களின் சுய உரிமைகளுக்கு முற்றிலும் எதிரானதாகும். நாட்டின் சட்டமும் மருத்துவ ரீதியான உரிமைகளும் பெண்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை சுயாட்சியை சபாநாயகர் கேள்விக்குள்ளாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று" என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

    Advertisement

    கருக்கலைப்பு ஒரு கொலை

    ஏனென்றால், கருக்கலைப்பு என்பது பெண்களின் அடிப்படை உரிமை என்பதை சுப்ரீம் கோர்ட்டே பல தீர்ப்புகளில் உறுதிப்படுத்தியுள்ளது.. அப்படியிருக்கும்போது, "கருக்கலைப்பு ஒரு கொலை" என முழக்கமிடும் மத ரீதியான ஊர்வலத்தில் சபாநாயகர் பங்கேற்பது நாட்டின் சட்டங்களுக்கு சவால் விடுவதற்குச் சமம் என்று, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் ஏற்கனவே தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.

    அதுமட்டுமல்ல, 1971 மருத்துவ கருக்கலைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுவது, பெண்களை சட்டவிரோத மற்றும் ஆபத்தான வழிகளை நோக்கித் தள்ளி, அவர்களின் உயிரையே பறிக்கும் அபாயத்தை உருவாக்கும் என்றும் டாக்டர்களும் எச்சரிக்கிறார்கள்.

    Advertisement

    மதரீதியான விமர்சனங்கள்

    ஒருபுறம் சபாநாயகரின் பேச்சு புயலைக் கிளப்பியுள்ள நிலையில், இன்னொருபக்கம், தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் மதரீதியான விவகாரங்களும் அரசியல் சூழலை மேலும் சூடேற்றியுள்ளன.

    மத்திய அரசின் FCRA சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தின் பின்னணியில் குறிப்பிட்ட மத அமைப்புகளை பாதுகாக்கும் திட்டம் இருப்பதாக எதிர்த்தரப்பு கொந்தளிக்கும் சூழல் நிலவுகிறது. மேலும், நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டசபையில் ஜெபமாலையுடன் பேசிய கருத்துக்கள் எரியும் தீயில் பெட்ரோலை ஊற்றியுள்ளன.

    விஜய் சைலண்ட் ஏன்?

    அதேபோல், ஆட்சியில் சிறுபான்மையினர் சமூகத்தினருக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதாக கூறி, டிரான்ஸ்பர் உத்தரவுகளை ரத்து செய்யச் சிலர் முயல்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    Advertisement

    இந்த அடுத்தடுத்த அதிரடி சம்பவங்களை ஆயுதமாக கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள், ஆளும் தவெக அரசை "இந்து எதிர்ப்பு கட்சி" என குற்றம்சாட்டி அரசியல் களத்தில் நெருக்கடியை அதிகப்படுத்தியுள்ளன.

    இத்தனை பரபரப்புகளுக்கும், அமைச்சர்கள் மற்றும் சபாநாயகரின் பகிரங்க மத அடையாள சர்ச்சைகளுக்கும் மத்தியில், கட்சித் தலைவர் விஜய் காத்து வரும் மவுனம் மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது. மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தும் இந்த விவகாரங்கள், தமிழக அரசியல் பாதையை எந்த திசையை நோக்கி நகர்த்தப்போகிறது என்ற பதைபதைப்பை அரசியல் விமர்சகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது....!!

    English Summary

    JCD Prabhakar’s Religious Remarks.. Speaking Against Abortion? CPI Slams Him