சட்டசபை உறுப்பினர்களை கைது செய்ய சபாநாயகரின் அனுமதி தேவையா? ஜேசிடி பிரபாகர் விளக்கம்

  • சென்னை: சட்டசபை உறுப்பினர்களை கைது செய்ய சபாநாயகரிடம் அனுமதி பெற தேவையில்லை என தமிழக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பதில் அளித்துள்ளார். எம்எல்ஏவை கைது செய்ய முன் அனுமதி பெற வேண்டும் என எந்த விதியிலும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் சட்டசபை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர செய்தியாளர்களிடம் பேசுகையில், 2026-2027 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டம் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது. வந்தே மாதரம் சட்டசபையில் பாடப்படும் விவகாரத்தில் ஏற்கெனவே உள்ள நடைமுறையில் உள்ளதே தொடரும். ஆகஸ்ட் 6-ஆம் தேதி வேளாண் நிதிநிலை தாக்கல் செய்யப்படும். சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதுமாக நேரலை செய்யப்படும்.

    Advertisement

    சட்டசபை உறுப்பினர்களை கைது செய்வதற்கு முன்னர் சபாநாயகரிடம் அனுமதி பெற வேண்டும் என எந்த விதிகளும் இல்லை. பேரவைக்குள் எம்எல்ஏக்களை கைது செய்ய வேண்டும் என்றால் பேரவைத் தலைவரிடம் அனுமதி பெற வேண்டும் என்பது விதியாகும்.

    திமுக எம்எல்ஏ மார்கண்டேயன் கைது குறித்து எனக்கு செய்திக் குறிப்பு அனுப்பியிருந்தனர்.
    பேரவை விதி 291, 292 பிரிவின் கீழ் கைது செய்தால் சபாநாயகரிடம் தகவல் தெரிவித்தால் போதும். திமுக எம்எல்ஏ மார்கண்டேயன் பேச்சு மக்கள் மத்தியில் வருத்தத்தையும் கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    சட்டசபைக்கு வந்தால் அவர் என்ன செய்வார் என்பதை குறிப்பிட்டு பேசியிருக்கிறார். இது குறித்து உறுப்பினர்கள் யாரேனும் புகார் தந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் எம்எல்ஏ மார்கண்டேயன் திமுக பொதுக் கூட்டத்தில் பேசிய போது முதல்வர் விஜய்யை ஒருமையில் பேசினார். அத்துடன் சட்டசபையை கூட்டினால் எலும்பை உடைத்து அனுப்புவோம் என மிரட்டல் விடுத்திருந்தார்.

    இதற்கு பலர் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். ஒரு மாநில முதல்வரின் எலும்பை உடைத்து அனுப்புவோம் என சொல்வது சரியல்ல என விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் நேற்று காலை மார்கண்டேயன் தூத்துக்குடி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

    அப்போது தான் ஒரு எம்எல்ஏ என்பதால் தன்னை கைது செய்ய சட்டசபை உறுப்பினரிடம் அனுமதி பெற வேண்டும் என போலீஸிடம் வாக்குவாதம் செய்தார். இதையடுத்து அவரை போலீஸார் சமாதானப்படுத்தி கைது செய்தனர். பின்னர் அவரை வண்டியில் ஏற்றும் போது திமுகவினர் மறியல் செய்தனர்.

    Advertisement

    அவர்களை கலைத்து விட்டு அங்கிருந்து மார்கண்டேயனை, தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவரை பார்க்க அவருடைய வழக்கறிஞர், முன்னாள் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு அனுமதி இல்லை என்பதால் அவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம் செய்தனர்.

    இதையடுத்து அவர்களை கலைந்து போக சொல்லி போலீஸார் அறிவுறுத்தியும் கேட்காததால் கீதா ஜீவன் உள்ளிட்டோரை கைது செய்து வேனில் ஏற்றினர். அனிதா ராதாகிருஷ்ணன் மயக்கம் வருவதாக கூறி காரில் புறப்பட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    இதையடுத்து இரவு தூத்துக்குடி நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் மார்கண்டேயனை 14 நாட்கள் காவலில் வைத்து நீதிபதி உத்தரவிட்டார். இதற்கு திமுக கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தது.

    English Summary

    JCD Prabhakar says on DMK MLA Markandeyan arrest that there is no speaker's permission needed to arrest an MLA.