ஜெம் வீரமணியிடம் வழக்கில் கட்டப்பஞ்சாயத்தா? ரூ.20 கோடி கேட்ட சாந்தி.. ஜான் பாண்டியன் விளக்கம்

  • சென்னை: பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான பாலியல் வழக்கில் தமிழக மக்கள் முன்னேற்ற கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் பெயர் அடிபடுகிறது. இவர் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக தகவல்கள் பரவி வரும் நிலையில் ஜான் பாண்டியன் இன்று விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர் ரஞ்சன் குமார் தான் சாந்தியும் சேர்ந்து தான் ஜெம் வீரமணியிடம் ரூ.20 கோடி வாங்கி தரும்படி கூறினர் என்று ஜான்பாண்டியன் பகீர் கிளப்பி உள்ளார்.

    தமிழகத்தின் பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு வயது 82. ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான இவர் பல சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அடுத்தடுத்து புகார்கள் வந்து கொண்டுள்ளன. இந்த விவகாரம் தற்போது தமிழகத்தில் பூதாகரமாகி உள்ளது.

    இதற்கிடையே தான் ஜெம் வீரமணியின் உதவியாளர் என சொல்லப்படும் சாந்தி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் எஸ்சி பிரிவு மாநில தலைவர் ரஞ்சன்குமார் ஆகியோரை தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் மிரட்டியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    ஜெம் வீரமணி தொடர்பான வீடியோ ஆதாரங்கள் சாந்தி மூலமாக ரஞ்சன்குமாருக்கு கிடைத்ததாகவும், இதனால் தொழிலதிபர் ஜெம் வீரமணிக்கு ஆதரவாக ஜான் பாண்டியன் செயல்பட்டு இருவரையும் மிரட்டியதாகவும் ரஞ்சன் குமார் குற்றம்சாட்டி உள்ளார். இது ஜான் பாண்டியனுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் தான் ஜான் பாண்டியன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக ஜான் பாண்டியன் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: ''இந்த வழக்கை பொறுத்தமட்டில் யூடியூபர் வேண்டுமென்றே பிரபலமாகி பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எங்களை போன்றவர்களை சம்பந்தப்படுத்தி மிஸ்யூஸ் செய்கிறார்கள். இதுதான் உண்மையான நிலை. இந்த விவகாரத்தில் என்னுடைய பெயரை அதிகமாக டேமேஜ் செய்வதை புதிய தமிழக கட்சி தான் செய்து வருகிறது. அதனை நாங்கள் பார்த்து வருகிறோம்.

    தொழிலதிபர் என்ற அடிப்படையில் வீரமணியை எனக்கு தெரியும். மற்றபடி அவருக்கும், எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. வீரமணியின் பர்ஷனல் விஷயங்கள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. காவல்துறை இதுவரை என்னிடம் விசாரிக்கவில்லை. காவல்துறை கேட்டால் பதிலளிக்க தயாராக இருக்கிறேன். ஒரு அரசியல் தலைவர் மூலமாக என்னை பார்க்க வேண்டும் என்று ரஞ்சன் என்னிடம் பெர்மிஷன் கேட்டார். அந்த அரசியல் தலைவரின் பெயரை நாகரீகம் கருதி நான் வெளியில் சொல்லமாட்டேன். வர சொல்லுங்கள் என்று கூறினேன்.

    ரஞ்சன் என்னுடைய வீட்டிற்கு வந்தார். சாந்தி என்ற மேடம் உங்களை பார்க்க வேண்டும் என்று சொல்வதாக கூறினார். என்ன விஷயம்? என்று கேட்டேன். பர்ஷனலாக பேச வேண்டும் என்று கூறி என்னுடன் ரஞ்சன் போட்டோ எடுத்து கொண்டு ஒரு நாளை 'பிக்ஸ்' செய்தார். தாஜ் ஹோட்டலுக்கு சாந்தி என்பவரை கூட்டி கொண்டு வந்தார். அந்த பெண், என்னை வீரமணி அப்படி செய்துவிட்டார்.. இப்படி செய்துவிட்டார்.. என்று கதையை கூறிவிட்டு ரூ.20 கோடி வாங்கி தர வேண்டும் என்று அந்த பெண்ணும், ரஞ்சனும் சேர்ந்து சொன்னார்.

    இந்த மாதிரியான கீழ்த்தரமான விஷயங்களை செய்யமாட்டேன் என்று கூறிவிட்டு நான் சென்றுவிட்டேன். இப்போது வரைக்கும் நான் ரஞ்சன், சாந்தியிடம் பேசியது கிடையாது. இப்போது வரை அந்த சாந்தியை எனக்கு தெரியாது. ரஞ்சன் தான் அழைத்து வந்தார்'' என்று கூறியுள்ளார்.

    நீங்கள் சாந்தியை மிரட்டி உள்ளதாக சொல்லப்படுகிறதா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு ஜான் பாண்டியன், ''நான் மிரட்டி இருந்தால் அவர் (சாந்தி) போலீசுக்கு தானே போய் இருக்க வேண்டும். என்னை சந்திக்க ஏன் வந்தார்?. டிமாண்ட் செய்து பணம் வாங்கி தர சாந்தியும், ரஞ்சனும் கூறினார்கள். இந்த மாதிரி வேலை எல்லாம் செய்ய மாட்டேன் என்று எழுந்துபோய்விட்டேன். அதோடு வருடம் 4 ஆகிவிட்டது. எனக்கும், அவர்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அது பொய்யான தகவல்'' என்றார்.

    English Summary

    Gem Veeramani Case: The name of John Pandian name has surfaced in connection with the sexual misconduct case against prominent businessman Gem Veeramani. Amidst circulating reports alleging his involvement in extra-judicial dispute settlement (kattapanchayat), John Pandian issued a clarification today. He made a sensational claim, stating that it was Ranjan Kumar-along with Shanthi-who had asked him to help secure a sum of Rs.20 crore from Gem Veeramani.