சென்னை: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு தங்கம் கொள்முதல் செய்வதற்கான ரூ.755 கோடி மதிப்பிலான டெண்டரை ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் பெற உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தங்கத்தின் விலையை தவிர்த்து சேதாரம் மற்றும் இதர கட்டணங்களுக்கு 1 பைசா மட்டும் என்று ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளதாகவும், இதனால் எல் 1 ஏலதாரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
தவெகவின் சட்டசபைத் தேர்தல் வாக்குறுதியில், தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தங்க மோதிரம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தாய்மாமன் சீர் பெட்டகம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி ஜூன் 23ஆம் தேதி தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதியன்று முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.755.83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஜூன் 22ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த அத்தனை குழந்தைகளும் இந்த திட்டத்தின் கீழ் கணக்கில் கொள்ளப்பட்டு பயன்பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன்பின் ஜூலை 14ஆம் தேதி தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான டெண்டர் கோரப்பட்டது. ஒரு கிராம் எடையுள்ள 4 லட்சத்து 41 ஆயிரத்து 667 தங்க மோதிரங்கள் வாங்க டெண்டர் அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அந்த தங்க மோதிரங்கள் 22 காரட் தூய்மையுடனும், 916 தரச்சான்றிதழ்வுடன் இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த டெண்டர் விண்ணப்பிப்பதற்கான காலம் ஆகஸ்ட் 18ஆம் தேதி 11 மணியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான டெண்டரை ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் பெற உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் தரப்பில் கோரப்பட்ட டெண்டரில் தங்கத்தின் விலையை தவிர்த்து சேதாரம் மற்றும் இதர கட்டணங்களுக்கு 1 பைசா செலவுகளாக மட்டுமே குறிப்பிட்டிருக்கிறது. இதனால் குறைந்த தொகையை குறிப்பிட்ட எல்1 ஏலதாரராக ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கு டெண்டர் கொடுக்கப்பட இருக்கிறது. இன்னும் 25 நாட்களில் திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ள நிலையில், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று பார்க்கப்படுகிறது. மேலும், டெண்டர் கோரிய நிறுவனங்களின் பட்டியல் சோசியல் மீடியாவில் வலம் வருகிறது. அது தொடர்பாக இன்னும் அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.