சென்னை: வனத்துறை, நீர்நிலைகள், கோவில் நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு பட்டா வழங்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். ஆனால், ஐகோர்ட்டு தீர்ப்பு எதிராக வந்தாலும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்குவோம் என்று அமைச்சர் ஒருவர் கூறியிருந்தார் . இதனை கண்ட ஐகோர்ட் நீதிபதிகள், நீர்நிலைகள், வனத்துறை, கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஐகோர்ட்டு உத்தரவை மீறி பட்டா வழங்கினால் அமைச்சர், அரசு அதிகாரிகள் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தனர்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகள், சட்டவிரோத கட்டிடங்கள், கடைகள் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், இ.மனோகரன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, திருவண்ணாமலை கலெக்டர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், கோவில் ராஜகோபுரம் முன்பு வணிக வளாகம் கட்டுவதற்காக பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட ரூ.6.40 கோடியில், ரூ.6.10 கோடி திரும்பப் பெற்று விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரின் அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், "கிரிவலப் பாதையில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் எப்படி கட்டிடங்கள் கட்டப்பட்டன? வனத்துறை, நீர்நிலைகள், கோவில் நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு பட்டா வழங்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். ஆனால், ஐகோர்ட்டு தீர்ப்பு எதிராக வந்தாலும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்குவோம் என்று அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். இதற்காகத்தான் (அரசை) உங்களை மக்கள் தேர்ந்தெடுத்தார்களா? எந்த தைரியத்தில் அமைச்சர் அப்படிச் சொன்னார்? என்று எங்களுக்கு தெரியவில்லை. இந்த நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கினால், அரசும், அரசு அதிகாரிகளும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். நாங்கள் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டோம். இந்த உயர்நீதிமன்றம் அத்தகைய நிலங்கள் குறித்து விசாரணை செய்வது மட்டுமல்லாமல், ஆவணங்களை பரிசீலித்து வருகிறது. நேரில் சென்றும் நாங்கள் விசாரணை நடத்துகிறோம். அப்படி விசாரித்து நாங்கள் (நீதிபதிகள்) போடும் உத்தரவுகளை அமைச்சரோ, அதிகாரியோ மாற்ற முயன்றால், அவர்கள் மிகக் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிவரும். இவர்கள்தான் இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை அனுமதிக்கிறார்கள். இந்த ஆக்கிரமிப்புகள் குறித்து யாராவது பொது நல வழக்கு மூலம் இந்த உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தால், இந்த உயர்நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளின் அடிப்படையில் அந்த ஆக்கிரமிப்புகளை உடனுக்குடன் நீக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. திருவண்ணாமலை வனப்பகுதியில், கோவில் நிலங்களில், நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற 2024-ம் ஆண்டு கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி சார்பில் பல அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை வருவாய்த்துறையும், வனத்துறையும், அறநிலையத்துறையும் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை" என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். அப்போது அறநிலையத்துறை வக்கீல் பரணீதரன், 'இதுபோன்ற நிலத்துக்கு பட்டா வழங்க அறநிலையத்துறைக்கு அதிகாரம் இல்லை' என்றார். உடனே நீதிபதிகள், "கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற இதுவரை என்ன செய்தீர்கள்?" என்று கேள்வி எழுப்பினர். பின்னர், இப்போது நாங்கள் தெரிவித்துள்ள இந்த எச்சரிக்கையை அரசுக்கு எடுத்துச் சொல்லுங்கள் என்று கூறி விசாரணையை தள்ளிவைத்தார்கள்.