விவாதத்தை கிளப்பிய.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அடங்கிய அமர்வின் தீர்ப்பு! விஜய்க்கு CPM கோரிக்கை

  • சென்னை: சமீபத்தில நீபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, இஸ்லாமிய பிற்படுத்தப்பட்டோர் தொடர்பாக வழங்கிய தீர்ப்பு விவாதங்களை கிளப்பியிருந்தது இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.

    Advertisement

    குறிப்பாக ஒருவர் மதம் மாறிவிட்டால் என்பதால்.. அதற்கு முன்னர் வரை அவர் அனுபவித்து வந்த சமூக, பொருளாதார ஒடுக்குமுறைகளில் இருந்து விடுதலை பெற்றுவிட்டார் என்று சொல்வதை ஏற்க முடியாது என்று சிபிஎம் கூறியிருக்கிறது.

    Advertisement

    இஸ்லாமிய மக்களின் நலன்

    இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் விடுத்திருக்கும் அறிக்கையில், "மதம் மாறிய இஸ்லாமிய எளிய மக்களுக்கு எதிரான தீர்ப்பு விரைவாக மேல்முறையீடு செய்திடுக! தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி. பாலாஜி ஆகியோரைக் கொண்ட மதுரை அமர்வு ஜூன் 25, 2026 அன்று இஸ்லாமிய பிற்படுத்தப்பட்டோர் சம்பந்தமாக வழங்கி உள்ள தீர்ப்பு இந்தியச் சமூகத்தின் யதார்த்தங்களை புறக்கணிப்பதாகவும், மதம் மாறிய எளிய ஒடுக்கப்பட்ட இஸ்லாமிய மக்களின் நலன்களுக்கு பாதகம் உருவாக்குவதாகவும் அமைந்துள்ளது.

    Advertisement

    இஸ்லாமிய மக்களின் எளிய ஒடுக்கப்பட்ட பிரிவினர் மத்தியில் இருந்து எழுந்த கோரிக்கைகளின் அடிப்படையில், தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை 09.03.2024 அன்று வெளியிட்டு இருந்த அரசாணை செல்லாது என மேற்கண்ட தீர்ப்பு கூறியுள்ளது.

    இட ஒதுக்கீட்டை பெறத் தகுதி பெற்றவர்கள்

    இந்த அரசாணையின்படி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர், பட்டியல் சாதிகளை சேர்ந்தவர்களாக இருந்து மதம் மாறிய இஸ்லாமியர்கள் அனைவரும் 2007 தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பு இஸ்லாமியர்கள் (தனியார் உள்ளிட்ட கல்வி நிலையங்கள், அரசு வேலைவாய்ப்புகள் இட ஒதுக்கீடு) சட்டம் 2007 இன் அடிப்படையில் வழங்கப்பட்ட 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டை பெறத் தகுதி பெற்றவர்கள் என அறிவிக்கப்பட்டது.

    Advertisement

    இத்தகைய சான்றிதழ் தனக்கு வழங்கப்படவில்லை என்று சமீர் அகமது (எதிர்) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வழக்கில் மேற்கண்ட அரசாணையே செல்லாது என்று தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    நோக்கம் கற்பிப்பது சரியல்ல

    "மதமாற்றங்களை ஏற்படுத்துவதற்காக இத்தகைய நிலைப்பாட்டை எடுத்த பிறகு, இஸ்லாமிலும் சமூகப் படிநிலைகள் உள்ளன என்று தற்போது கூறுவது நேர்மையற்றதாகும்" என்ற நீதிமன்றத்தின் கருத்து வழக்கின் மைய அம்சத்தை மீறிய விமர்சனம் ஆகுமென கருதுகிறோம். மதம் மாறுவதும், மதப் பிரசாரம் செய்வதும் அரசியல் சாசனம் தந்துள்ள உரிமைகளாக இருக்கும் போது அவற்றின் மீது நோக்கம் கற்பிப்பது சரியல்ல. இன்னொன்று சமூகப் படிநிலைகள் கண்கூடாக இருக்கும் போது அதை மறுதலிப்பதும் நீதியல்ல.

    Advertisement

    இந்திய யதார்த்தம்

    இந்த அரசாணை "இசுலாமியக் கோட்பாடுகளுக்கே முரணானது... ஒருவர் இசுலாமிய மதத்திற்கு மாறி விட்டார் எனில் அவர் வெறும் இசுலாமியர் மட்டுமே" என்றெல்லாம் நீதிமன்றம் கூறுகிறது. ஒருவர் மதம் மாறியவுடனேயே ஏற்கெனவே அனுபவித்து வரும் சமூக, பொருளாதார ஒடுக்குமுறைகளில் இருந்து விடுதலை பெற்று விடுகிறார் என்ற அணுகுமுறை இயந்திர கதியானது. மதம் மாறிய பின்னரும் சாதி துரத்துகிறது என்பது இந்திய யதார்த்தம். குறிப்பிட்ட மதம் பேசுகிற சமத்துவம் அதன் இலக்காக இருக்கலாம்,

    பரிந்துரைகள் அடிப்படையிலேயே அரசாணை

    ஆனால், அதைப் பின்பற்றுகிற எல்லோருக்கும் சமத்துவம் கைவசமாகிறது என்ற அனுமானத்தில் அரசின் தலையீடுகள், நிவாரணங்கள் இருக்க இயலாது. மேலும் தமிழ்நாடு பிற்பட்டோர் ஆணையத்தால் பரிசீலிக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் அடிப்படையிலேயே அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது என்பதும், பிற்பட்டோர் பட்டியல் பற்றி தீர்மானிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இருப்பதைப் பயன்படுத்தி முறையாகவே அது வெளியிடப்பட்டும் இருக்கிறது என்பது முக்கியமானது.

    Advertisement

    ஆகவே, இந்த தீர்ப்பு ஏற்கத்தக்கதல்ல. தமிழ்நாடு அரசு உடனடியாக மேல்முறையீடு செய்து, ஏற்கெனவே உள்ள அரசாணை அடிப்படையில் இசுலாமிய மதத்திற்கு மாறிய பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட, சீர்மரபினர், பட்டியல் சாதியினர் நலன்களை முழுமையாகப் பாதுகாக்க வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்துகிறது" என தெரிவித்திருக்கிறது.

    English Summary

    Justice Swaminathan: Amidst the debate sparked by a recent verdict regarding Muslims classified as 'Backward Classes'—delivered by a bench comprising Justices G.R. Swaminathan and P.B. Balaji—the Communist Party of India (Marxist) has urged the Tamil Nadu government to file an appeal against the ruling.