Palani Land Scam: பிபி அதிகமாயிருச்சு.. திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜஸ்டின் மணிகண்டன்! என்னாச்சு?

  • திண்டுக்கல்: பழனி முருகன் கோவிலுக்கு வழங்கப்பட்ட 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வெறும் 2 கோடிக்கு முறைகேடாக தனி நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை கொடைக்கானலில் வைத்து இன்று சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் இரவு நேரத்தில் தனக்கு திடீரென நெஞ்சுவலி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டதோடு, ரத்தம் அழுத்தம் அதிகரித்ததாக ஜஸ்டின் மணிகண்டன் கூறியதால் அவரை திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

    Advertisement

    ​பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்தின் நில மோசடி தொடர்பாக, பழனி கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் ச.முருகானந்தம் அளித்த புகாரின் பேரில், சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் போலி அறக்கட்டளை பிரமுகர் முருகதாஸ் உள்ளிட்ட 4 பேர் மீது பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    Advertisement

    ​தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து, கடந்த 15.07.2026 அன்று இவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் கடந்த 17 தினங்களாக திண்டுக்கல் பழனி ஆகிய இடங்களில் விசாரணை மேற்கொண்டனர்.

    இவ்வழக்கு தொடர்பாக அறக்கட்டளையை சேர்ந்த முருகதாஸ் நிலத்தை விலக்கி வாங்கிய மடத்துக்குளத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை பழனிபுதூரைச் சேர்ந்த சேதுபதி இவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட வழக்கறிஞர் அன்வர்தீன் ஆகியோர் 29.07.26 அன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த 6 நாட்களாக சிபிசிஐடி அலுவலகத்தில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் ஆஜரானார்.

    Advertisement

    இந்த நிலையில் நேற்று ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் பத்திர எழுத்தாளர் ஜெயபிரகாஷ் ஆகிய இருவரின் முன்ஜாமீன் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதி ராஜசேகர், இருவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து இன்று திண்டுக்கல் சிபிசிஐடி போலீசார் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை கொடைக்கானலில் பதுங்கி இருந்த நிலையில் அவரை கைது செய்து திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.

    இதற்கிடையே இன்று கைது செய்யப்பட்ட ஜஸ்டின் மணிகண்டனை திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டிருந்தனர். அப்போது திடீரென தனக்கு நெஞ்சு வலிப்பதாகவும், மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும், ஜஸ்டின் மணிகண்டன் கூறியிருக்கிறார். இதை அடுத்து அவரை திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போலீசார் மருத்துவ பரிசோதனை செய்தனர்.

    Advertisement

    அப்போது அவருக்கு ரத்த அழுத்தம் அதிகரித்து இருப்பதாக கூறியதால் அந்த மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சிகிச்சைக்கு பிறகு நாளை ஜஸ்டின் மணிகண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    English Summary

    Arrested sub-registrar Justin Manikandan was admitted to Dindigul Government Hospital after complaining of chest pain and high blood pressure.