கலைஞர் கருணாநிதி 8ஆம் ஆண்டு நினைவு நாள்.. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி.. திரண்ட திமுகவினர்!

  • சென்னை: திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக சுமார் 50 ஆண்டுகள் பொறுப்பு வகித்து, அகில இந்திய அரசியலில் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்து, தமிழக வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கிய கலைஞர் கருணாநிதியின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் திமுக தலைவர் ஸ்டாலின்.

    Advertisement

    "என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே".. இந்த வாக்கியம் திமுக தொண்டர்களை கிட்டத்தட்ட 50 ஆண்டு காலமாய் கட்டிப்போட்ட மந்திரச் சொல். திருவாரூர் திருக்குவளையில் 1924 ஜூன் 3 ஆம் தேதி பிறந்து பின்னாளில் தமிழ்நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் முகமாக மாறியவர் கலைஞர் கருணாநிதி.

    Advertisement

    1957 முதல் 2018 வரை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர், 40 ஆண்டுகள் திமுக தலைவர், ஐந்து முறை தமிழகத்தின் முதலமைச்சர் என்று அசைக்க முடியாத ஆட்சி புரிந்தவர். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திமுக-வின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி காலமானார்.

    பெரியாரின் கொள்கைகளையும், அண்ணாவின் கோட்பாடுகளையும் தமிழகத்தின் தலையெழுத்தாய் மாற்றியவர் கலைஞர் கருணாநிதி. ஓயாத உழைப்பாளி, ஒப்பற்ற படைப்பாளியான கருணாநிதியின் 8வது நினைவுநாளையொட்டி, திமுக தொண்டர்களும் அரசியல் பிரமுகர்களும் இன்று அவரை நினைவுகூர்ந்து வருகின்றனர்.

    Advertisement

    கலைஞர் கருணாநிதி நினைவுநாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணியினர் கலந்து கொள்ளும் அமைதிப் பேரணி இன்று காலை 8 மணிக்கு சென்னை, அண்ணா சாலை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலை அருகிலிருந்து புறப்பட்டது.

    இந்த அமைதிப் பேரணியில், முன்னாள் அமைச்சர் பெருமக்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு , பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக, பகுதிக் கழக, வட்டக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுகவின் பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

    Advertisement

    கலைஞர் நினைவுநாளையொட்டி ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் உருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினார் ஸ்டாலின். அங்கிருந்து திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி தொடங்கியது. காமராஜர் சாலையில் மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடந்தது.

    கலைஞரின் 8வது நினைவு நாளான இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. மலர்களால், "போராளி ஓய்வதில்லை" என்ற வாசகம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    கலைஞர் நினைவிடத்துற்கு அமைதிப் பேரணியாக வந்து சேர்ந்த திமுக தலைவர் ஸ்டாலின், கலைஞர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். திமுகவினர் முழக்கமிட்டு மரியாதை செய்தனர்.

    English Summary

    Today marks the 8th death anniversary of Kalaignar Karunanidhi, who served as the leader of the Dravida Munnetra Kazhagam (DMK) for nearly five decades, stood as an exemplary guide in national politics, and remains an indispensable figure in the history of Tamil Nadu. A peace rally is being held today to commemorate the occasion.