சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக இருக்கும் கமல்ஹாசன், திமுக ஆதரவில் ராஜ்யசபா எம்பியானார். இவர் ராஜ்யசபா எம்பியாகி ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்த ஓராண்டில் ராஜ்யசபாவில் கமல்ஹாசன் வெறும் 2 கேள்விகள் மட்டுமே கேட்டுள்ளதும், ஒரெயொரு விவாதத்தில் மட்டுமே பங்கேற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி அவரது வருகை பதிவு 100 சதவீதத்துக்கு வெறும் 51 சதவீதமாக மட்டுமே இருக்கிறது.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவராக இருக்கும் கமல்ஹாசன் தமிழக அரசியலில் ஜொலிக்கவில்லை. அவரும், அவரது கட்சியும் போட்டியிட்ட தேர்தல்களில் எல்லாம் தோல்வியை தழுவியது. இதனால் வேறு வழியின்றி கடந்த ஆண்டு திமுக கூட்டணியில் ஐக்கியமானார் கமல்ஹாசன். திமுக சார்பில் கமல்ஹாசனுக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்பட்டது. திமுக எம்எல்ஏக்களின் தயவில் ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற்று எம்பியும் ஆனார் கமல்ஹாசன். கடந்த 2025ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி அவர் ராஜ்யசபா எம்பியாக நாடாளுமன்றத்துக்குள் என்ட்ரி கொடுத்ததார். கமல்ஹாசன் ராஜ்யசபா எம்பியாகி ஓராண்டு நிறைவு பெற்றது. இந்த ஓராண்டில் அவரது செயல்பாடு மிகவும் மோசமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனை ராஜ்யசபாவின் அதிகாரப்பூர்வ டேட்டா மற்றும் பிஆர்எஸ் இந்தியா அமைப்பின் தகவல்கள் உறுதி செய்கின்றன. அதில் கமல்ஹாசன் எம்பியான பிறகு கடந்த ஆண்டு 2025ல் குளிர்கால கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தெடார் நடந்தது. இதில் குளிர்கால கூட்டத்தொடரில் 80 சதவீதம் வரை அவர் பங்கேற்றார். மழைக்கால கூட்டத்தொடரில் 100 சதவீதம் வரை பங்கேற்றார். ஆனால் 2026ம் ஆண்டில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அவரது வருகை பதிவு 26 சதவீதமாக சரிந்தது. மேலும் கடந்த மாதம் 20ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13 வரை நடைபெற்று வரும் தற்போதைய நாடாளுமன்ற மழைக்கால கூட்டதொடரில் ஒரு நாள் கூட கமல்ஹாசன் பங்கேற்றவில்லை. நீட் வினாத்தாள் விவகாரம், வந்தேமாதரம் பாடல் தொடர்பான சர்ச்சைகளால் லோக்சபா, ராஜ்யசபா களேபரமாக நடந்த நிலையில் கமல்ஹாசன் அதுபற்றி எந்த கவலையும் படாமல் நாடாளுமன்றம் பக்கமே செல்லவில்லை. இதனால் ஓராண்டில் கமல்ஹாசனின் ராஜ்யசபா வருகை பதிவு வெறும் 51 சதவீதமாக சரிந்துள்ளது. அதுமட்டுமின்றி இதுவரை கமல்ஹாசன் மொத்தம் 2 கேள்விகள் மட்டுமே ராஜ்யசபாவில் கேட்டுள்ளார். ஒன்று இந்தியாவின் தோரியம் வளம் பற்றியும், இன்னொன்ஸ் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பு தொடர்பாக மட்டுமே அவர் கேள்வி எழுப்பி உள்ளார். இதுவரை ஒரேயொரு விவாதத்தில் மட்டுமே பங்கெடுத்துள்ளார். தனிநபர் சார்ந்த எந்த மசோதாவையும் அவர் கொண்டு வரவில்லை. இதனால் கமல்ஹாசனின் செயல்பாட்டை நெட்டிசன்கள் விமர்சிக்க தொடங்கி உள்ளனர். தமிழகத்தில் இருந்து எதற்கு கமல்ஹாசன் எம்பியானா? என்று பலரும் கேள்வி எழுப்பி விமர்சிக்க தொடங்கி உள்ளனர். அதேவேளையில் கமல்ஹாசன் ராஜ்யசபா எம்பியாக பதவியேற்ற அதேநாளில் ராஜ்யசபா எம்பியான திமுகவின் ராசாத்தி, எஸ்ஆர் சிவலிங்கம் ஆகியோரின் செயல்பாடு அவரை ஒப்பிடும்போது சிறப்பாக உள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் திமுக எம்பி ராசாத்தி ராஜ்யசபாவில் மொத்தம் 257 விவாதங்களில் கலந்து கொண்டுள்ளார். அவரது அட்டென்டென்ஸ் 97 சதவீதமாக உள்ளது. மொத்தம் 61 கேள்விகளை எழுப்பி உள்ளார். மற்றொரு திமுகவின் ராஜ்யசபா எம்பி எஸ்ஆர் சிவலிங்கம் கடந்த ஓராண்டில் மட்டும் 50 கேள்விகளை எழழுப்பி .ள்ளார். ஒரு விவாதத்தில் பங்கெடுத்துள்ள 53 சதவீத வருகையை பதிவு செய்துள்ளார். அதேபோல் 2வது முறையாக திமுக சார்பில் ராஜ்யசபா எம்பியாகி உள்ள அந்த கட்சியின் மூத்த வழக்கறிஞர் பி வில்சனும், கமல்ஹாசன் பதவியேற்ற அதேநாளில் தான் பொறுப்பேற்றார். இவர் கடந்த ஓராண்டில் மட்டும் மொத்தம் 856 விவாதங்களில் பங்கேற்றுள்ளார். 449 கேள்விகள் கேட்டுள்ளதோடு, 16 தனிநபர் மசோதாக்களை சமர்ப்பித்துள்ளார். அவரது வருகை பதிவு 96 சதவீதமாக உள்ளது. மேலும் கமல்ஹாசனை போல் அதேநாளில் ராஜ்யசபா எம்பியாகி ஓராண்டை நிறைவு செய்துள்ள அதிமுகவின் இன்பதுரை மற்றும் எம் தனபால் ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். தனபால் 73 சதவீத வருகை பதிவுடன் 16 விவாதங்களில் பங்கேற்று 55 கேள்விகளை எழுப்பி உள்ளார். இன்பதுரை 63 சதவீத வருகை பதிவுடன் 8 விவாதங்களில் பங்கேற்று 68 கேள்விகளை எழுப்பி உள்ளார். இதனால் தான் ராஜ்யசபா எம்பியாக கமல்ஹாசனின் செயல்பாடு மோசமாகி உள்தாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.