சென்னை: பெருந்தலைவர் காமராஜரின் 124வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், இன்று சென்னையில் காமராஜரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்திய அரசியல் வரலாற்றில் தனக்கென தனி இடம் பிடித்தவர் கர்மவீரர் காமராஜர். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், காமராஜர் ஆட்சியை அடிக்கோடிட்டு காட்டாமல் இருக்க முடியாது என்பதே அவரது புகழுக்குச் சான்று.
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15 ஆம் தேதி தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி நாளாக முன்னாள் தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி அறிவித்தார். அன்று முதல் ஒவ்வொரு வருடமும் காமராஜரின் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜரின் 124-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் காமராஜர் திருவுருவச் சிலை மற்றும் உருவப் படத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் காமராஜரின் 124-வது பிறந்தநாளையொட்டி சென்னை, அண்ணா சாலை, பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள காமராஜர் உருவச் சிலைக்கு முன்பாக காமராஜரின் திருவுருவப் படத்திற்கு தமிழக முதலமைச்சர் விஜய் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், அருண்ராஜ், வெங்கட்நாராயணன், ராஜ்மோகன், மரிய வில்சன் மற்றும் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி, மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.