பசி இனி இல்லை.. காமராஜர் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம்! முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!

  • சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத்திட்டம் இன்று முதல் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 6 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் வகையில், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டத்தை, சென்னை திருவான்மியூரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் விஜய் இன்று காலை தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு உணவு பறிமாறியதோடு, அவர்களுடன் அமர்ந்து உணவு உண்டார்.

    Advertisement

    பள்ளி மாணவர்களிடையே ஊட்டச்சத்து குறைபாட்டை தடுப்பது, பள்ளி வருகையை அதிகரிப்பது, மாணவர்கள் கல்வியை தொடர்ந்து கற்கும் சூழலை உருவாக்குவது உள்ளிட்ட நோக்கங்களுடன் அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக கடந்த 2022ஆம் ஆண்டு காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.

    Advertisement

    அதன்பின்னர் இந்த திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 37 ஆயிரத்து 447 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் சுமார் 19 லட்சத்து 34 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.

    2026 தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்த பிறகு, இந்த திட்டத்தின் பெயர் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என மாற்றப்பட்டது. இதன் அடுத்தகட்டமாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வகையில் திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த விரிவாக்கத்தின் மூலம் கூடுதலாக 15 லட்சத்து 30 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயனடையவுள்ளனர்.

    Advertisement

    முன்னதாக, காமராஜர் காலை உணவுத்திட்டத்தின் விரிவாக்கத்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் விஜய் லண்டன் சென்றிருந்ததால், திட்டத்தின் தொடக்க விழா செப்டம்பர் 22ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதன்படி, இன்று சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய் இந்த திட்டத்தை தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு உணவு பறிமாறினார்.

    இன்றைய விரிவாக்கத்துக்குப் பிறகு, கூடுதலாக, 44 ஆயிரத்து 984 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற உள்ளனர். மொத்தமாக 34 லட்சத்து 64 ஆயிரம் மாணவ, மாணவிகள் காலை உணவுத்திட்டத்தின் பயனை பெறுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை விரிவுபடுத்துவதற்காக கூடுதலாக ரூ.217.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ள மதுராந்தகம் (செங்கல்பட்டு), தாராபுரம் (திருப்பூர்) ஆகிய 2 தொகுதிகள் இடம்பெறும் மாவட்டங்களைத் தவிர்த்து, தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இன்று முதல் இந்த விரிவாக்கப்பட்ட காலை உணவுத்திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது. இதற்கான ஏற்பாடுகள் பள்ளி அளவில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    மாணவர்களுக்கு ஒரே வகையான உணவு தொடர்ந்து வழங்கப்படாமல், வாரத்தின் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு உணவு வகைகள் வழங்கும் வகையில் உணவுப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திங்கட்கிழமை - உப்புமா, செவ்வாய்க்கிழமை - கிச்சடி, புதன்கிழமை - பொங்கல், வியாழக்கிழமை - உப்புமா, வெள்ளிக்கிழமை - இனிப்பு வகை உணவு என உணவுப்பட்டியலில் தயாரிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு கூறியுள்ளார்.

    English Summary

    CM Vijay launches the Kamarajar Breakfast Scheme expansion today, benefiting 15.30 lakh additional students across 15,454 schools.