காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்.. செப். 22ல் சென்னையில் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்

  • சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வரும் செப்டம்பர் 22-ஆம் தேதி சென்னையில் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தைத் தொடங்கி வைக்க இருக்கிறார். பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என்ற பெயரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் இச்சேவை விரிவுபடுத்தப்படவுள்ளது.

    Advertisement

    இந்த காலை உணவுத்திட்டம் முன்னதாக பெரியார் பிறந்த நாளான இன்று தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் முதலமைச்சர் ஜோசப் விஜய் லண்டனில் இருந்து இன்று தான் சென்னை திரும்பியதால் திட்டம் ஒத்திவைக்கப்பட்டிருநதது. சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பிய தகவலின்படி, இந்த விரிவாக்கத் திட்டத்தை முதலமைச்சர் செப்டம்பர் 22 அன்று தொடங்கி வைக்கிறார்.

    Advertisement

    மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களைத் தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் அதே நாளில் செயல்படுத்தப்படும். விரிவாக்கப்பட்ட இத்திட்டத்தின் சோதனை ஓட்டம் செப்டம்பர் 11 அன்று நடத்தப்பட்டதாக சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது. சோதனை ஓட்டத்தின் போது கண்டறியப்பட்ட குறைபாடுகளை உடனடியாக சரிசெய்யவும், திட்டத்தைத் தொடங்குவதற்கு முன் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முடிக்கவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

    இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களைத் தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் அதே நாளில் செயல்படுத்தப்படுகிறது.

    Advertisement

    இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், "தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று (18.9.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத் தொடக்கம் மற்றும் செயல்படுத்துதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    முதல்வர் விஜய் உத்தரவு

    தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தவும், பசியின்றி மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்து, கல்வியில் முழுமையான கவனம் செலுத்திடவும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் கடந்த 15.06.2026 அன்று நடைபெற்ற சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தின்போது, காலை உணவுத் திட்டத்தை 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு விரிவாக்கம் செய்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    Advertisement

    இத்திட்டத்தை பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 447 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலமாக பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகத்தாலும், இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பேரூராட்சிப் பகுதிகளிலுள்ள 2,150 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலமாக நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தாலும், ஊரகப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளை ஒட்டியுள்ள பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள 12,857 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலமாக சுய உதவிக் குழு உறுப்பினர்களால் அந்தந்தப் பள்ளியிலேயே காலை உணவு தயாரித்து வழங்கப்படும்.

    Advertisement

    மாணவர்களின் உடல் நலம், ஊட்டச்சத்து, பள்ளி வருகை, கற்றல் ஆகிய அம்சங்களை ஒருங்கிணைத்து, பள்ளிக் கல்வியின் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

    22ம் தேதி தொடக்கி வைக்கிறார் முதல்வர் விஜய்

    இதனை தமிழ்நாடு முதலமைச்சர் 22.9.2026 அன்று சென்னையில் தொடங்கி வைக்கவுள்ளார். தொடக்கப்பள்ளி மாணவர்களைத் தொடர்ந்து நடுநிலைப்பள்ளி மாணவர்களையும் உள்ளடக்கும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம், மாணவர்களின் கல்விப் பயணத்திற்கும், சமூக முன்னேற்றத்திற்கும் பெரும் துணையாக அமையும்.

    அரசு அறிவுறுத்தல்

    இக்கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தினை செயல்படுத்திடும் சமையல் கூடங்கள் மற்றும் உணவு பரிமாறும் இடங்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட வேண்டும் மற்றும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட வேண்டுமென்றும் உத்தரவிட்டார். மேலும், மாணாக்கர்கள் அனைவருக்கும் சூடான, சுவையான, உரிய அளவிலான, ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்கப்பட வேண்டுமென்றும், இத்திட்டத்திற்காக பணியாற்றும் அனைத்துத் துறை அலுவலர்களும் முறையாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை ஒருங்கிணைந்து செவ்வனே செய்திட வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    The Tamil Nadu government has postponed the expansion of the Perunthalaivar Kamarajar Breakfast Scheme to classes 6-8 in government and government-aided schools to September 22.