மதுராந்தகத்திற்கு விஜய் வருகையால்! வண்டலூர் மாணவி பாலியல் வழக்கை போலீஸ் மூடி மறைப்பதா? கனிமொழி

  • சென்னை: சென்னை வண்டலூர் அருகே அரசு பள்ளி வளாகத்தில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு கூட்டு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தை, மதுராந்தகத்திற்கு முதல்வர் விஜய் வருவதால் பொய் செய்தி எனக் கூறி காவல் துறை மூடி மறைக்க பார்த்ததாக திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கனிமொழி கூறியிருப்பதாவது: வண்டலூர் அருகே பள்ளி வளாகத்திற்குள்ளேயே 10ஆம் வகுப்பு மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து, மூச்சடைக்கச் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

    இன்று முதலமைச்சர் விஜய் மதுராந்தகம் வருகிறார் என்பதற்காக, இந்தச் சம்பவத்தை பொய் செய்தி எனக் கூறி, மூடி மறைக்க காவல்துறை முயற்சிப்பதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றம்சாட்டும் அளவுக்கு கேடுகெட்ட ஆட்சியை, இந்த தவெக அரசு நடத்திக் கொண்டிருக்கிறது.

    பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைப்பதைவிட, முதலமைச்சரின் வருகைக்கு களங்கம் ஏற்படக் கூடாது என்பதுதான் காவல்துறையின் முன்னுரிமை என்றால், உண்மையில் இது யாருக்கான ஆட்சி? எப்படி அந்தச் சிறுமிக்கு நீதி கிடைக்கும்? என கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

    வண்டலூர் அரசு பள்ளி பாத்ரூமில்.. எம்எல்ஏ இப்பவே இங்கே வரணும்.. தவெக அரசு மீது பாய்ந்த பெற்றோர்! ஏன்

    செங்கல்பட்டு மாவட்டம் , வண்டலூரை அடுத்த கண்டிகையில் உள்ள அரசு பள்ளியில் மர்ம நபர்கள் சிலர் பள்ளிக்குள் நுழைந்து 10 ஆம் வகுப்பு மாணவிக்கு கூட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

    பள்ளியின் சுற்றுச்சுவர் வழியாக ஏறி குதித்த 4 பேர் கொண்ட கும்பல், கழிப்பறைக்கு வந்த மாணவியை கைக்குட்டையில் மயக்க மருந்து போட்டு மயக்கமடைந்த செய்து கூட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

    இது குறித்து செய்தியை தாம்பரம் காவல் துறை மறுத்தது. இது தவறான தகவல் என கூறியிருந்தது. இந்த நிலையில் கனிமொழி உள்ளிட்டோர் கண்டித்திருந்த நிலையில், அந்த சம்பவம் குறித்து ஆதாரங்களை தேடி வருகிறோம் என தாம்பரம் போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர்.

    அந்த விளக்கத்தில், தாம்பரம் போலீஸார் 24.09.2026 அன்று, தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட கண்டிகை கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் குழந்தை பாலியல் துன்புறுத்தல் தொடர்பானதாகக் கூறப்படும் ஒரு சம்பவம் குறித்து புகார் பெறப்பட்டது. புகார் கிடைத்த உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டு, மூத்த பெண் காவல் அதிகாரிகளின் மேற்பார்வையில், பெண் காவல் ஆய்வாளர் மூலம் துரிதமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    வண்டலூர் அருகே அரசு பள்ளி மாணவி மீது பாலியல் அத்துமீறலுக்கு ஆதாரம் இல்லை! தாம்பரம் போலீஸ் விளக்கம்

    விசாரணையின் போது, தொடர்புடைய அனைத்து ஆதாரங்களும் உடனடியாக சேகரிக்கப்பட்டு, கவனமாக சரிபார்க்கப்பட்டன. பள்ளி வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிடைக்கப்பெற்ற கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. மேலும், இவ்விவகாரத்துடன் தொடர்புடைய சாட்சிகளிடம் விரிவாக விசாரணை நடத்தப்பட்டது. கிடைக்கப்பெற்ற பிற அறிவியல் மற்றும் உறுதிப்படுத்தும் ஆதாரங்களும் கவனமாக ஆய்வு செய்யப்பட்டன.

    இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையிலும், சம்பந்தப்பட்ட குழந்தையின் வாக்குமூலம் மற்றும் சேகரிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையிலும், புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி அரசு பள்ளியில் அத்தகைய சம்பவம் நடைபெற்றது என்பதை உறுதிப்படுத்தும் எந்தவொரு ஆதாரமும் இந்நிலையில் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. எனினும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    மேற்கண்ட தகவல்களை கருத்தில் கொண்டு, குழந்தையின் நலன் கருதி, சரிபார்க்கப்படாத தகவல்களைப் வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு தாம்பரம் போலீஸார் விளக்கமளித்துள்ளனர்.

    English Summary

    DMK MP Kanimozhi condemns Police department for trying to hide Vandalur minor girl sexual assault case as CM Vijay is on the way to Maduranthagam and the incident was happened in Chengelput district.