எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரி குழுவில் ஒரு பெண் கூட இடம்பெறவில்லை.. முதல்வர் விஜய்யை சாடிய கனிமொழி

  • சென்னை: தமிழ்நாடு அரசின் எம்.ஜி.ஆர் திரைப்படம் , தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கைக்காக அமைக்கப்பட்ட குழுவில் ஒரு பெண் உறுப்பினர் கூட நியமிக்கப்படவில்லை என்று திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    பல சவால்களைக் கடந்து திரைத்துறையில் கலைஞர்களாக தொழில்நுட்ப வல்லுநர்களாகப் பணியாற்றிவரும் பெண்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கனிமொழி கூறியுள்ளார்.

    Advertisement

    எம்ஜிஆர் திரைப்படம், தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் இந்தக் கல்வி ஆண்டுக்கான, இளங்கலை காட்சிக்கலை பட்டப்படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தேர்வுக் குழு தலைவராக ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்தக் குழுவின் உறுப்பினர்களாக, ஒளிப்பதிவாளர்கள் வேல்ராஜ், விஜய் மில்டன், இயக்குநர்கள் வெற்றிமாறன், லிங்குசாமி, பேரரசு, உள்ளிட்ட பத்து திரைத்துறை பிரபலங்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். படத்தொகுப்பாளர்கள் ஸ்ரீகர் பிரசாத், ராமர், வண்ண வடிவமைப்பாளர் பாலாஜி, கலை இயக்குநர் முத்துராஜ், ஒலி பொறியாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

    மனோஜ் பரமஹம்சா முதலமைச்சர் விஜயுடன் நீண்டகாலமாக நெருக்கமாக பணியாற்றியவர் என்பதால், அவரது நியமனம் அரசியல் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. இதை சுட்டிக்காட்டி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், "முதல்வரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளருக்கு அரசுப் பதவி வழங்கப்பட்டுள்ளது" என்று விமர்சித்து வருகின்றன.

    Advertisement

    இந்நிலையில், இந்தக் குழுவில் ஒரே ஒரு பெண் கூட நியமிக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார் திமுக துணை பொதுச் செயலாளரும், எம்.பியுமான கனிமொழி.

    இதுகுறித்து கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாடு அரசின் எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கைக்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் ஒரு பெண் உறுப்பினர் கூட நியமிக்கப்படவில்லை.

    பல சவால்களைக் கடந்து திரைத்துறையில் கலைஞர்களாக, தொழில்நுட்ப வல்லுநர்களாகப் பணியாற்றிவரும் பெண்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.

    English Summary

    DMK MP Kanimozhi has condemned the fact that not a single woman member was appointed to the committee constituted for student admissions at the Tamil Nadu government's MGR Film Institute.