சென்னை: டெல்லியில் இருக்கும் தவெக தான் பாஜக என்றும், தமிழ்நாட்டில் இருக்கும் பாஜக தான் தவெக என்றும் திமுக எம்பி கனிமொழி சாடியுள்ளார். சிஜேபிக்கு ஆதரவாக போராடியவர்கள் காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்துள்ள நிலையில், போராடுபவர்களை தவெக அரசு ஒடுக்குவதை பார்க்கும் போது தமிழ்நாட்டில் இருக்கும் பாஜக தான் தவெக என்பது உறுதியாவதாக சாடியுள்ளார்.
எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் சிஜேபி கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே சிஜேபி நடத்திய போராட்டத்தில் பாஜக மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது.
இதனால் மீண்டும் இன்னொரு போராட்டத்தை நடத்த பாஜக அரசு அனுமதிக்காமல், போராடுபவர்களை கைது செய்து வருகிறது. சிஜேபி கட்சியின் அபிஜீத் தீப்கே விமானத்தில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளார். யூடியூபர் துருவ் ராதே வீட்டுக் காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். ஜந்தர் மந்தர் வரும் இளைஞர்கள் யாரையும் காவல்துறை விடாமல் கைது செய்திருக்கிறது. இதேபோல் தமிழ்நாட்டில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். சென்னையை தொடர்ந்து சேலம் சிஜேபி ஆதரவாளர்கள் மற்றும் இடதுசாரி அமைப்புகள் போராட்டத்தை தொடங்கியுள்ளன. இதனால் நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. தமிழ்நாட்டில் போராடியவர்கள் கைது செய்யப்பட்ட சூழலில், உடனடியாக அவர்கள் அடைக்கப்பட்ட சமுதாய நலக் கூடத்திற்கு முன்பு சென்று திமுக எம்பிக்கள், முன்னாள் அமைச்சர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல்துறையினர் வேறு வழியின்றி அவர்களை விடுவிக்க வேண்டிய நிலை வந்தது. இதனால் தமிழ்நாட்டில் தவெக அரசு போராடுபவர்களை ஒடுக்குவதாக விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. இதுதொடர்பாக திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், இன்று தமிழ்நாட்டில் போராடுபவர்களை தவெக அரசு ஒடுக்குவதைப் பார்க்கும்போது ஒன்று மட்டும்தான் உறுதியாகிறது. டெல்லியில் இருக்கும் தவெகதான் பாஜக, தமிழ்நாட்டில் இருக்கும் பாஜகதான் தவெக என்று விமர்சித்துள்ளார். மற்றொரு எக்ஸ் பதிவில், தலைமை தேர்தல் ஆணையரின் ராஜினாமாவை வலியுறுத்தி அமைதியான முறையில் போராட முயன்ற சிஜேபி அமைப்பின் நிறுவனர் அபிஜித் தீப்கேவை விமானத்திற்குள்ளேயே தடுத்து வைத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 45 மெட்ரோ நிலையங்களை மூடுவது, 250-க்கும் மேற்பட்ட ரயில்களை ரத்து செய்வது, இணைய சேவைகளை முடக்குவது மற்றும் 25,000 பாதுகாப்புப் பணியாளர்களைக் குவிப்பது என மத்திய அரசு அறிவிக்கப்படாத நெருக்க்கடி நிலைக்குள் டெல்லியை ஒரு கோட்டையாக மாற்றியுள்ளது. ஜனநாயகம் எங்குதான் எஞ்சியிருக்கிறது? அபிஜித் தீப்கே உட்பட கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். எதேச்சதிகாரத்தால் ஜனநாயகத்தை அமைதியாக்க முடியாது என்றும் விமர்சித்துள்ளார்.