கனிமொழி, ஸ்டாலின், உதயநிதி.. அடியோடு மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! திமுகவின் நெக்ஸ்ட் மூவ் என்ன

  • சென்னை: திமுகவில் அடுத்தகட்ட அதிகார மாற்றங்கள் குறித்தான விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் திமுகவின் "செயல் தலைவர்" பொறுப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படலாம் என்ற தகவல்கள் கட்சி வட்டாரத்திலும் அரசியல் தளத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான ராஜ கம்பீரன் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

    Advertisement

    News focus tamil என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள ராஜகம்பீரன், "திமுகவுக்குள் இப்போதைக்கு உட்கட்சி பூசல்களும் அதிகாரத் தேக்கமும் அதிகரித்து காணப்படுகின்றன. மாவட்ட செயலாளர்களாகவும் அமைச்சர்களாகவும் உள்ள மூத்த நிர்வாகிகள், அடுத்து ஒரு தலைமை உருவாகிவிடக் கூடாது என்ற அச்சத்தில் புதியவர்களை வளரவிடாமல் தடுக்கிறார்கள்.. அதிகார மையம் ஒரே இடத்தில் தேங்கும்போது அது வளர்ச்சியாக இல்லாமல் வீக்கமாக மாறிவிடுகிறது.

    Advertisement

    புதிய தலைவர்கள்

    கட்சியில் 70 வயதைக் கடந்த மூத்த தலைவர்கள் நீண்டகாலமாக பொறுப்பில் உள்ளனர். முதியவர்களின் அனுபவமும் வழிகாட்டலும் கட்சிக்குத் தேவைதான் என்றாலும், உடல்நிலை காரணங்களால் அவர்களால் களத்தில் இறங்கி வேகமாக செயல்பட முடிவதில்லை.

    அன்பில் மகேஷ் போன்ற இளைஞர்களால் மட்டுமே உடனடிப் பயணங்களை மேற்கொண்டு தீவிரமாக பணியாற்ற முடிகிறது. திராவிடக் கட்சிகளில் முக்கிய இடத்தை பிடிக்க 60 முதல் 70 வயதாகும் என்ற நிலை மாறுவது அவசியம். இளைஞர்களுக்கு அதிகார பொறுப்புகளை வழங்காமல் பல்லக்கு தூக்குபவர்களாக மட்டுமே வைத்துள்ளதால், அவர்கள் அண்ணாமலை, விஜய் போன்ற புதிய தலைவர்களை நோக்கி நகர்கிறார்கள்.

    Advertisement

    கலைஞர் ஆட்சிக்காலம்

    அரசியல் மேடைப்பேச்சுகள் வரம்பு மீறுவது என்பது அனைத்து கட்சிகளிலுமே காணப்படும் ஒரு பொதுவான அம்சமாகும். அதனால் மேடைப் பேச்சை மட்டுமே திமுகவின் தோல்விக்கு காரணமாக கருத முடியாது. 80-கள் மற்றும் 90-களில் மேடைப் பேச்சுக்கள் பதிவாவதில்லை. ஆனால், இன்றைய 2K மற்றும் ஜென்-சி கிட்ஸ் காலத்தில் சோஷியல் மீடியாக்களும், கேமராக்களும் அனைத்தையும் உடனடியாகப் பதிவுசெய்வதால், எல்லை மீறும் பேச்சுகள் குற்றச்சாட்டுகளாக உருவெடுக்கின்றன.

    அதேசமயம், சோஷியல் மீடியாவில் திமுக தனது சாதனைகளை கொண்டுசேர்க்க தவறவிட்டுள்ளது. கிராமப்புற இளைஞர் ஒருவர் அரசுப்பள்ளியில் படித்து, இலவச சைக்கிள், சத்துணவு மற்றும் லேப்டாப்பை பெற்று, முதல் பட்டதாரியாகி ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் அளவுக்கு உள்கட்டமைப்பை உருவாக்கியது திராவிட இயக்கமும் கலைஞரும்தான்.

    Advertisement

    திமுக சந்திக்கும் சிக்கல்கள்

    90-களில் 12 மணி நேரமாக இருந்த பஸ் பயணத்தை இன்றைக்கு மேம்படுத்தப்பட்ட சாலைகள் மூலம் விரைவாக்கிய வரலாற்றை தற்கால இளைஞர்களுக்கு உணர்த்த வேண்டும்.

    திமுக சந்திக்கும் முதன்மையான விமர்சனம் வாரிசு அரசியலாகும். மு.க. ஸ்டாலின் தனது அரசியல் வாழ்வின் தொடக்கத்திலிருந்தே "வாரிசு அரசியல்" என்ற கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டே வளர்ச்சி அடைந்தார். குறிப்பாக, 1994-ல் மதிமுக தொடங்கப்பட்ட காலகட்டத்தில் இருந்து இந்த விமர்சனத்தை எதிர்கொண்ட அவர், திமுகவின் தலைவராகப் பொறுப்பேற்பதற்கு ஏறத்தாழ 50 ஆண்டு கால நீண்ட அரசியல் பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது. 67 வயதில்தான் அவரால் இந்த நிலையை அடைய முடிந்தது.

    Advertisement

    ஸ்டாலின் எதிர்கொண்ட வாரிசு அரசியல்

    உதயநிதி ஸ்டாலினின் வளர்ச்சியோடு ஒப்பிடும்போது, ஸ்டாலின் கட்சிப் பொறுப்புகளுக்கு லிப்ட்" மூலம் உடனடியாக வரவில்லை. அவர் சட்டமன்ற உறுப்பினர், சென்னை மாநகராட்சி மேயர், உள்ளாட்சித் துறை அமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் செயல் தலைவர் என ஒவ்வொரு படிநிலையாக கடந்துதான் படிப்படியாக உயர்ந்தார்.

    ஸ்டாலினின் பல ஆண்டுகால உழைப்பையும், கட்சி பணிகளுக்கான பயணத்தையும் மக்கள் நேரில் பார்த்த காரணத்தால், அவர் கலைஞர் அவர்களின் மகனாக இருந்தாலும், அவரின் உழைப்பை மதித்து மக்கள் அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டனர். ஆனால், உதயநிதி ஸ்டாலினுக்கு தொடக்கத்திலேயே விரைவான பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

    Advertisement

    உதயநிதி ஸ்டாலின்

    தலைமையின் இந்த அணுகுமுறையை பார்த்து மாவட்ட செயலாளர்களும் தங்கள் மகன்களுக்குப் பதவி கேட்கும் சூழல் உருவாகிறது. காங்கிரஸ் கட்சி மன்மோகன் சிங்கை முன்நிறுத்தியது போல திமுகவிலும் மாற்றுத் தலைமை உருவாக்கப்பட வேண்டும் அல்லது கனிமொழி போன்றவர்களை பரிசீலிக்க வேண்டும்.

    திமுகவுக்குள் மாற்றுத் தலைமையை உருவாக்க வேண்டும் என்ற கருத்துகள் எழும்போது, உதயநிதி ஸ்டாலினை விட கனிமொழியின் தலைமை கட்சிக்கு வந்து சேருமானால், அது பெண்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எடுபடும் என்று பலர் கருதுகிறார்கள்..

    உதயநிதி? கனிமொழி?

    உதயநிதி மீது இருக்கும் சில விமர்சனங்களோ அல்லது வெறுப்போ கனிமொழி மீது பலருக்கு இல்லை. அவரது முதிர்ச்சியான அணுகுமுறையும் அனுபவமும் கனிமொழியை ஒரு தலைவராக ஏற்றுக்கொள்வதற்கான சூழலை உருவாக்குகிறது. கட்சி தலைமை இதனை செய்ய தவறினால் பொதுமக்களிடமிருந்து கட்சி அன்னியப்படும் சூழல் உருவாகும்.

    கனிமொழி, கட்சியின் தலைவராக வரலாம் என்று சிலர் கருத்துகளை முன்வைத்தாலும், இதுவும் வாரிசு அரசியலின் ஒரு அங்கம்தானே என்ற கேள்விகளும் எழாமல் இல்லை. இருந்தாலும் இத்தகைய மாற்றுத் தலைமை மாற்றங்களை தற்போதைய திமுக தலைமை ஏற்றுக்கொள்ளுமா என்பதும், பரிசீலனைக்கு உட்படுத்துமா என்பதும் பெரிய கேள்வியாகவே உள்ளது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Kanimozhi, Stalin, Udhayanidhi.. DMK Set for a Major Shake-Up at Anna Arivalayam? What’s Next?