உயிரை பறிக்க யாருக்கும் உரிமை இல்லை! கர்நாடகாவில் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு! கொந்தளித்த கனிமொழி

  • சென்னை: கர்நாடகாவில் மான் வேட்டையாடியதாக சொல்லி தமிழர்களை அம்மாநில வனத்துறை அதிகாரிகள் சுட்டு கொன்ற விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இதற்கிடையே இந்த சம்பவத்தை கண்டித்துள்ள திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி, மனித உயிர்களைப் பறிப்பதற்கு எந்த அரசுக்கும் அதிகார அமைப்பிற்கும் உரிமை கிடையாது என சாடியுள்ளார்.

    Advertisement

    கர்நாடகாவில் சாமராஜ்நகர் மாவட்டத்தில் மான்களை வேட்டையாடியதாக சொல்லி 3 தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் கர்நாடகாவில் பூதாகரமாக வெடித்துள்ளது. சாமராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயத்துக்கு உட்பட்ட ஆனூர் வனவிலங்கு மண்டலத்தின் ஹோலேமுராடி வனப்பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

    Advertisement

    3 பேர் உயிரிழப்பு

    சிலர் வனப்பகுதியில் மான்களை வேட்டையாடுவதாக நேற்று காலை வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் வனப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். அதில் மரியமங்களா கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி சுவாமி, லாசர் டோடியா குமார் மற்றும் ஜெகநாதன் டோடியா பீட்டர் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். மேலும், அங்கிருந்து 2 துப்பாக்கிகளும், சுமார் 20 கிலோ விலங்கு இறைச்சி அடங்கிய பைகளும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்தச் சம்பவத்தை கண்டித்து உயிரிழந்தோரின் குடும்பத்தினரும் உறவினர்களும் போராட்டம் நடத்தினர். மேலும், தனிப்பட்ட பகை காரணமாகவே இந்த துப்பாக்கி சூடு நடந்ததாக உயிரிழந்தோரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். மேலும், தவறே செய்திருந்தாலும் சுட்டு கொல்ல அதிகாரம் கொடுத்தது யார் என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.

    Advertisement

    உடல்களை வாங்க சம்மதம்

    மேலும், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி உயிரிழந்தோரின் உடல்களையும் வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய விசாரணை நடத்தப்படும் என கர்நாடக அரசு சார்பில் உறுதியளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்தே இன்று உடல்களை வாங்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தை தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டித்து வருகிறார்கள். இதற்கிடையே திமுக துணை பொதுச்செயலாளரும் லோக்சபா எம்பியுமான கனிமொழியும் கண்டித்துள்ளார்.

    கனிமொழி

    இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில், கர்நாடக வனத்துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று தமிழர்கள் உயிரிழந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. மனித உயிர்களைப் பறிப்பதற்கு எந்த அரசுக்கும் அதிகார அமைப்பிற்கும் உரிமை கிடையாது.

    Advertisement

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் எழுப்பியுள்ள சந்தேகங்களைக் கருத்தில் கொண்டு வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும். உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு உரிய நிவாரணம் வழங்குவதோடு, இந்தச் சம்பவத்தில் உண்மை நிலையை வெளிக்கொணர கர்நாடக அரசிற்கு தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    English Summary

    DMK leader Kanimozhi condemns the killing of three Tamils in a Karnataka forest department firing(கர்நாடகா வனத்துறை துப்பாக்கி சூடு கனிமொழி கண்டனம்): Karnataka Forest Firing latest news in tamil.