“தலைவர்களை மாற்றினால் கட்சி வளராது!” மாணிக்கம் தாகூர் பற்றி கார்த்தி சிதம்பரம் சொன்ன வார்த்தை!

  • சென்னை: சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தனது நிலைப்பாட்டை மாற்றி இருந்தது. இதையடுத்து, கட்சியின் தலைவராக மாணிக்கம் தாகூர் மாற்றப்பட்டார். இப்படி இருக்கையில், தலைவர்களை மாற்றினால் மட்டும் கட்சி வளாராது என்று காங்கிரஸ் எம் கார்த்தி சிதம்பரம் பேசியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

    Advertisement

    கட்சியின் தலைவர் மாற்றம் குறித்து செய்தியாளர்கள் கார்த்தி சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு பதிலளித்த அவர், "தவெக ஆட்சி அதிகாரத்திற்கு வந்த 2 மாதங்கள் தான் ஆகிறது. அதற்குள் அக்கட்சியின் ஆட்சியை விமர்சிக்க வேண்டாம் என்று சொல்கிறேன். மாணிக்கம் தாகூர் மாறி 15 நாட்கள்தான் ஆகிறது. தவெகவுக்கே டைம் கொடுங்கள் என்று சொன்னேன். அதற்குள் மாணிக்கம் தாகூருக்கு மார்க் போட வேண்டும் என்று கேட்பது எப்படி நியாயமாக இருக்க முடியும்?

    Advertisement

    ஆட்களை மாற்றினால் கட்சி வளருமா?

    தலைவர் பொறுப்பில் A, B என ஆட்களை மாற்றி போட்டால் எல்லாம் கட்சி வளராது. வளர்ச்சிக்கு அடிப்படையில் சில விஷயங்களை செய்ய வேண்டும். அதை நான் என் கட்சிக்குள் சொல்லிக்கொள்கிறேன். முன்பு அழகிரி இருந்தார். பின்னர் செல்வப்பெருந்தகை வந்தார்.. இப்போது மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டிருக்கிறார். எனவே தனிப்பட்ட முறையில் இவர்களால்தான் கட்சி வளர்ந்தது என்றோ, வளரவில்லை என்றோ சொல்லிவிட முடியாது.

    காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும்?

    அடிப்படையில் காங்கிரஸ் கட்சி அரசியல் ரீதியாக என்ன நிலைப்பாட்டை எடுக்கிறது? எந்த இடத்தை நிரப்புகிறது என்பதை முடிவு செய்ய வேண்டும். இதுதான் கட்சியின் வளர்ச்சிக்கு உதவும்" என்று கூறியிருக்கிறார்.

    Advertisement

    தமிழக சட்டமன்ற தேர்தல் யாருமே எதிர்பார்க்காத ரிசல்ட்டை கொடுத்திருந்தது. திமுக, அதிமுகவை ஓரம் கட்டி தவெக பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும்.. தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலையில் இருந்தது. இந்த நேரத்தில் முதல் ஆளாய் ஓடி போய் ஆதரவு கொடுத்த கட்சிதான் காங்கிரஸ்.

    கூட்டணியை முறித்த காங்கிரஸ்

    காங்கிரஸை தொடர்ந்து கம்யூனிஸ்டுகள், ஐயுஎம்எல் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகளும் தவெகவுக் ஆதரவு கொடுத்து, விஜய்யை முதலமைச்சர் சீட்டில் அமர வைத்தன. ஆனால், காங்கிரஸை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் திமுகவுடன் சுமூகமான முறையில்தான் கூட்டணியை முறித்துக்கொண்டு வந்தன. காங்கிரஸ் மட்டும் எடுத்தோம், கவிழ்த்தோம் என முடிவெடுத்திருந்தது. திமுக தலைவர்களை ஒரு பேச்சுக்கு கூட காங்கிரஸ் தலைவர்கள் நேரில் சென்று சந்திக்கவில்லை.

    Advertisement

    காங்கிரஸ் vs திமுக

    எனவே காங்கிரஸ் மீது கடுமையான விமர்சனங்களை திமுக அடுக்க தொடங்கியது. முன்னதாக 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணிக்கும், அதிக சீட்டுகளை கேட்டு பெறுவதற்கும் காங்கிரஸ் தரப்பில் ப.சிதம்பரம் மற்றும் செல்வப்பெருந்தகை முயற்சி எடுத்திருந்தனர். அதிலும் செல்வப்பெருந்தகை, திமுகவுடன் ஓவர் நெருக்கம் காட்டி வந்தார். இந்த காலத்தில் மாணிக்கம் தாகூர் இவ்வளவு நெருக்கத்தை விரும்பவில்லை. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்கிற கோரிக்கையை எழுப்பி, திமுகவுடன் சண்டை செய்து வந்திருந்தார். கடைசியில் திமுக தேர்தலில் தோல்வியடைந்தது.

    மாணிக்கம் தாகூரின் வருகை

    இதையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டின் தலைவர் பொறுப்பை மாற்ற தலைமை யோசித்தது. அதன்படி செல்வப்பெருந்தகை ராஜினாமா செய்ய.. அந்த இடத்திற்கு மாணிக்கம் தாகூர் கொண்டுவரப்பட்டார்.

    Advertisement

    அரசியல் போக்கை முன்கூட்டிய கணித்தவர் என்பதால், மாணிக்கம் தாகூருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அப்படியெனில் காங்கிரஸ் கட்சி இனி வேகமாக வளருமா? என்று கேள்வி எழுந்திருந்தது. இந்த கேள்விக்கு கார்த்தி சிதம்பரம் அளித்த பதில் தற்போது கவனம் பெற்றிருக்கிறது.

    English Summary

    Karti Chidambaram: Following the assembly elections, the Tamil Nadu Congress Committee altered its stance, and subsequently, Manickam Tagore was appointed as the party's leader. Amidst this, remarks made by Congress leader Karti Chidambaram—stating that the party would not grow merely by changing leaders—have drawn attention.