சென்னை: அண்ணாமலை 'வி தி லீடர்ஸ்' என்ற அமைப்பை தொடங்கி உள்ளார். விரைவில் அதனை அரசியல் கட்சியாக மாற்றுவதற்கான பணிகளில் அண்ணாமலை ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தான் 'வி தி லீடர்ஸ்' அமைப்பின் பொதுச்செயலாளராக கரு நாகராஜனை நியமனம் செய்து இன்று அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த கரு நாகராஜன் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை 'வி தி லீடர்ஸ்' என்ற அமைப்பை தொடங்கி உள்ளார். இதனை விரைவில் அரசியல் கட்சியாக மாற்ற உள்ளதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். அண்ணாமலையை நம்பி பாஜகவை சேர்ந்த பலரும் இந்த அமைப்பில் இணைந்துள்ளனர். தற்போது 'வி தி லீடர்ஸ்' அமைப்பில் ஆன்லைன் வழியாக மொத்தம் 19,95,688 பேர் சேர்ந்துள்ளனர். முதற்கட்டமாக நீர்நிலைகளை தூய்மைப்படுத்தும் பணியில் அண்ணாமலை அமைப்பு தீவிரம் காட்டி வருகிறது. மாறாக அரசியல் சார்ந்த விஷயங்களில் அண்ணாமலை முன்பு போல் அதிரடியாக பேசுவது இல்லை. இதனால் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கவலையடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி அண்ணாமலை அரசியல் கட்சி தொடங்குவாரா? இல்லையா? என்ற கேள்வியுடன் அவர்கள் வலம் வருகின்றனர். இப்படியான சூழலில் தான் அண்ணாமலை இன்று 'வி தி லீடர்ஸ்' அமைப்பிற்கு பொதுச்செயலாளரை நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ''அன்புள்ள நமது We The Leaders அமைப்பின் தலைவர்களுக்கு, வணக்கம். நமது அமைப்பின் வளர்ச்சியையும், அமைப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதையும் கருத்தில் கொண்டு கரு. நாகராஜனை We The Leaders இயக்கத்தின் அமைப்புப் பொதுச்செயலாளராக பெருமகிழ்ச்சி அடைகிறோம். நியமிப்பதில் நமது அமைப்பின் கொள்கைகள் மற்றும் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, மாநிலம் முழுவதும் அமைப்பு ரீதியான செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல், நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்துதல், நிர்வாகிகளுக்கும் களப்பணியாளர்களுக்கும் இடையே சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை, அமைப்புப் பொதுச்செயலாளர் என்ற முறையில் கரு. நாகராஜன் முன்னெடுத்துச் செல்வார் அவரது அரசியல் அனுபவம், அர்ப்பணிப்பு மற்றும் தலைமைப் பண்புகளின் மூலம், நமது We The Leaders அமைப்பை மேலும் வலுப்படுத்தி, மக்கள் மத்தியில் நமது அமைப்பின் செயல்பாடுகளை விரிவாகக் கொண்டு செல்வார் என்ற நம்பிக்கை உள்ளது. அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது We The Leaders அமைப்பின் கட்டமைப்பை ஒவ்வொரு நிலையிலும் வலுப்படுத்தவும், நமது நோக்கங்களையும் செயல்பாடுகளையும் மக்கள் மத்தியில் கொண்டுசேர்க்கவும், அமைப்புப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கரு. நாகராஜன்-க்கு, நமது அமைப்பின் அனைத்து தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் முழுமையான களப்பணியாளர்களும், ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார். 'வி தி லீடர்ஸ்' அமைப்பு பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள கரு நாகராஜன், அண்ணாமலையின் தீவிர ஆதரவாளர் ஆவார். தென்மாவட்டத்தை சேர்ந்த இவர் வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். நாடார் சமுதாயத்தை சேர்ந்த இவர் முதலில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியில் சேர்ந்து செயல்பட்டு வந்தார். 2009 பாஜக கூட்டணியில் திருநெல்வேலி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன்பிறகு 2016ல் பாஜகவில் இணைந்தார். பாஜகவில் 2016 சட்டசபை தேர்தலில் மைலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பிறகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்ததால் 2017ல் நடந்த ஆர்கே நகர் சட்டசபை தொகுதியில் பாஜகவில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பிறகு பாஜகவில் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர், மாநில துணை தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளில் செயல்பட்டார். இந்த சமயத்தில் அண்ணாமலையுடன் நெருக்கமாக செயல்பட தொடங்கினார். அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகிய உடனேயே கரு நாகராஜனும் கட்சிக்கு குட்பை சொன்னார். இந்நிலையில் தன் கரு நாகராஜனுக்கு, அண்ணாமலை தனது 'வி தி லீடர்ஸ்'இயக்கத்தின் அமைப்பு பொதுச்செயலாளர் பொறுப்பை வழங்கி உள்ளார். 'வி தி லீடர்ஸ்' அமைப்பு தொடங்கி பல மாதங்கள் ஆகியும் யாருக்கும் பதவிகள் கொடுக்காமல் அண்ணாமலை இருந்தார். தற்போது முதல் முறையாக மாநில அளவில் அமைப்பின் பொதுச்செயலாளர் பதவிக்கு கரு நாகராஜனை நியமனம் செய்துள்ளார். இதனால் அண்ணாமலை ஆதரவாளர்கள் ஹேப்பியாகி உள்ளனர். வரும் நாட்களில் இன்னும் அடுத்தடுத்து புதிய அறிவிப்புகளை அண்ணாமலை வெளியிட்டு 'வி தி லீடர்ஸ்' அமைப்பின் செயல்பாட்டை அடுத்தக்கட்டமாக அரசியல் நோக்கி நகர்த்தலாம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.