சென்னை: காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக தமிழ்நாடு கர்நாடகா இடையேயான மோதல் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்நிலையில், கர்நாடகா தலைநகர் பெங்களூரில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு தமிழக முதல்வர் விஜய்க்கு கர்நாடகா முதல்வர் டி.கே. சிவகுமார் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண முந்தைய காலகட்டங்களில் தமிழக முதல்வர்கள் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து பார்க்கலாம்.
தமிழகத்தில் காவிரி டெல்டா பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு அணையில் போதிய நீர் இல்லாததால் திட்டமிட்டபடி தண்ணீர் திறக்கப்படவில்லை. இதற்கிடையே, காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டதில் கர்நாடகா அரசு தொடர்ந்து உறுதியாக உள்ளது.
இத்திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்பபு தெரிவித்து வருகிறது. மேலும், மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு மட்டுமல்லாமல் காவிரி விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் விஜய் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அண்மையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டங்களிலும், ஜூன் மாதத்திற்கான தமிழகத்தின் பங்கான 9.91 டி.எம்.சி. நீரை திறந்துவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது. ஆனால், குடிநீர் தேவைக்கு போதுமான அளவு மட்டுமே தண்ணீர் இருப்பதாகவும், மழை குறைவு காரணமாக தமிழகத்திற்கு நீர் திறக்க இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால், காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டங்களில் தமிழகத்தின் கோரிக்கைகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டாலும், கர்நாடகா அவற்றை ஏற்க மறுக்கும் நிலை நீடித்து வருகிறது. காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண முந்தைய காலகட்டங்களில் தமிழக முதல்வர்கள் நேரடி பேச்சுவார்த்தை மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். 1997 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த கருணாநிதி உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் அப்போதைய கர்நாடக முதல்வர் ஜே.எச். பட்டீலுடன் சென்னையில் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும், அந்த சந்திப்பில் எந்தவிதமான உடன்பாடும் எட்டப்படவில்லை. 2012 ஆம் ஆண்டு பெங்களூருவில் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருடன் காவிரி நீர் பிரச்சினை குறித்து ஆலோசனை மேற்கொண்டார். ஆனால், அந்த முயற்சியும் தீர்வை எட்டவில்லை. 2018 இல் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு, கர்நாடக முதல்வர் சித்தராமையாவுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுமதி கோரி கடிதம் அனுப்பப்பட்ட நிலையில், சாதகமான பதில் கிடைக்கவில்லை. அதேபோல், 2021 முதல் 2026 வரை மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசில் சட்ட ரீதியான போராட்டங்கள் மூலம் தமிழகத்தின் நீர் உரிமையை வலியுறுத்தும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தியது. இந்நிலையில், தற்போதைய சூழலில் இரு மாநில முதல்வர்களுக்கு இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மறுக்கும் கர்நாடக அரசு
கருணாநிதி ஜெயலலிதாவின் முயற்சிகள்