சென்னை: உலகளாவிய கால்பந்து அமைப்பான ஃபிஃபா (FIFA), தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் 'கருப்பு' படத்தின் மாஸ் டயலாக்கை மேற்கோள் காட்டி வெளியிட்டுள்ள பதிவு சர்வதேச அளவில் வரவேற்பை பெற்றிருக்கிறது.
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ள 'கருப்பு' திரைப்படத்தின் டயலாக்கை, கால்பந்து ஜாம்பவான்களுக்கு டைட்டிலாக வைக்கப்பட்டிருப்பது சூர்யா ரசிகர்களை உற்சாகமடைய செய்திருக்கிறது.
2026 பிஃபா உலகக் கோப்பைக்கான எதிர்பார்ப்பு உலகெங்கும் அதிகரித்துள்ள நிலையில், பிஃபாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் ஒரு சுவாரஸ்யமான பதிவைப் பகிர்ந்துள்ளது. அதில் கால்பந்து உலகின் ஜாம்பவான்களான லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் நெய்மர் ஆகியோரின் புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பை வெளியிட்டு, அதற்கு 'கருப்பு' படத்தின் புகழ்பெற்ற வசனமான "பீக் சம்பவம் லோடிங்" என்பதைத் தலைப்பாக வைத்துள்ளது. திரைப்படங்களையும் விளையாட்டையும் இணைக்கும் இத்தகைய கிராஸ்ஓவர் பதிவுகள் இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு, விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் அதிகாரப்பூர்வ பக்கத்தில், நடிகர் மற்றும் தமிழக முதல்வர் விஜய்யின் 'ஜன நாயகன்' படத்தால் ஈர்க்கப்பட்டு, வீரர் ஜானிக் சின்னரின் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது, கால்பந்து ஜாம்பவான்களை அடையாளப்படுத்த தமிழ் திரைப்படத்தின் டயலாக் பயன்படுத்தப்பட்டிருப்பது உலகம் முழுவதும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது. பிஃபா வரலாற்றிலேயே முதல்முறையாக 48 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன. இப்படி இருக்கையில் தமிழ் சினிமா வசனம் சர்வதேச கால்பந்து அமைப்பின் பக்கத்தில் இடம்பெற்றிருப்பது தமிழ் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.2026 பிஃபா உலகக் கோப்பை: சில முக்கியத் தகவல்கள்
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து இப்போட்டிகளை நடத்துகின்றன.
கேப் வெர்டே, குராசோ, ஜோர்டான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் முதல்முறையாக உலகக் கோப்பையில் அறிமுகமாகின்றன.
டிஆர் காங்கோ மற்றும் ஹைட்டி அணிகள் 1974-க்குப் பிறகு மீண்டும் களமிறங்குகின்றன. ஈராக் (1986), ஆஸ்திரியா, நார்வே மற்றும் ஸ்காட்லாந்து (1998) ஆகிய அணிகளும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தகுதி பெற்றுள்ளன.