கருப்பு முருகானந்தத்தின் பதவி பறிப்பு.. பாஜக பெண் நிர்வாகியின் பாலியல் புகாரால் நயினார் அதிரடி

  • சென்னை: தமிழ்நாடு பாஜக நிர்வாகி கருப்பு முருகானந்தத்தின் பதவி இன்று அதிரடியாக பறிக்கப்பட்டுள்ளது. கருப்பு முருகானந்தம் பாஜகவின் மாநில பொதுச்செயலாளராக செயல்பட்டு வந்த நிலையில் அவர் மீது பாஜக பெண் நிர்வாகி பாலியல் புகார் அளித்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பாஜகவில் மாநில பொதுச்செயலாளராக செயல்பட்டு வந்தவர் கருப்பு முருகானந்தம். இவர் 1991ம் ஆண்டில் சிவகங்கை லோக்சபா தொகுதியில் அதிமுகவில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

    30 ஆண்டுகளுக்கு மேலாக பாஜகவில் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில் தான் கருப்பு முருகானந்தம் மீது திருச்சியை சேர்ந்த தமிழ்நாடு பாஜக பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் புகார் அளித்தார்.

    கருப்பு முருகானந்தம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கர்ப்பமாக்கினார். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இப்போது சொத்துகளை அபகரிக்க நினைப்பதோடு, கொலை மிரட்டல் விடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தேசிய தலைமைக்கு புகார் அளித்தார்.

    கருப்பு முருகானந்தத்தின் பதவியை பறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் புகாரில் கூறியிருந்தார். இந்நிலையில் தான் கருப்பு முருகானந்தத்தின் பதவி இன்று பறிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    ''தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் எம் முருகானந்தம் (கருப்பு முருகானந்தம்) கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் கட்சியின் பொறுப்பில் இருந்து உடனடியாக விடுவிக்கப்படுகிறார்'' என கூறப்பட்டுள்ளது.

    இந்த நடவடிக்கையால் கருப்பு முருகானந்தம் கடும் அதிருப்தியடைந்துள்ளார். பொய்யான புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். அதோடு தன் மீதான நடவடிக்கையை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் அவர் கூறியள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ''அனைவருக்கும் வணக்கம், ஆர்.எஸ்.எஸ் (RSS) அமைப்பில் தொடங்கிய எனது இந்த நெடிய பயணம், பாரதிய ஜனதா கட்சியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்விதப் புகாருமின்றித் தூய்மையான முறையில் அர்ப்பணிப்புடன் தொடர்ந்த ஒன்றாகும்.

    இத்தகைய சூழலில், முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் மூலமாக எவ்வித முறையான விசாரணையும் நடத்தப்படாமல், என்னை உடனடியாகப் பொறுப்பிலிருந்து விடுவித்தது மிகுந்த கண்டனத்திற்குரியது.

    இது தொடர்பாக தேசியப் பொதுச் செயலாளர் சந்தோஷ் ஜி, மாநிலப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஜியிடம் நான் ஏற்கெனவே பேசியுள்ளேன். ஒழுங்கு நடவடிக்கைக் குழு முழுமையாக விசாரித்த பிறகே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால், அவ்வாறான எவ்வித விசாரணையுமின்றி, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் போலியாக உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் புனையப்பட்ட போலிப் புகார் மனுவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு என் மீது நடவடிக்கை எடுத்திருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், இத்தகைய போலிச் செய்திகளையும் வதந்திகளையும் பரப்புவோர் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என கூறி தனது அதிருப்தியை வெளிக்காட்டி உள்ளார்.

    English Summary

    Tamil Nadu BJP functionary Karuppu Muruganantham has been abruptly stripped of his post today. This action was taken after a female BJP functionary lodged a sexual harassment complaint against him. he had been serving as the party's State General Secretary.