கரூரில் 5 நிமிடத்தில் செந்தில் பாலாஜி மருத்துவமனைக்கு ஓடியது எப்படி? - அமைச்சர் நிர்மல்குமார் கேள்வி

  • சென்னை: கரூர் சம்பவத்தில் அரை மணி நேரத்தில் நாடகம் அரங்கேற்றப்பட்டதாக அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார். 5 நிமிடத்தில் செந்தில் பாலாஜி எப்படி மருத்துவமனைக்குச் சென்றார்? இரவு 12 மணிக்கு அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கரூருக்கு வர வேண்டிய அவசியம் என்ன? என நிர்மல்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசியது தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. முதலமைச்சர் விஜய்யின் விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, "பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல் தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்று கரூர் மக்களுக்குத் தெரியும்" என திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

    Advertisement

    செந்தில் பாலாஜியின் இந்த விமர்சனத்திற்கு எதிராக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், "முதலமைச்சர் விஜய் கரூருக்கு நேரில் சென்று மக்களைச் சந்தித்ததைத் தாங்கிக் கொள்ள முடியாமல், திமுகவினர் சம்பந்தமில்லாத விஷயங்களைப் பேசி வருகிறார்கள்.

    அன்று கரூரில் விபத்து நடந்த போது, இரவு 8:05 மணிக்குத் தான் அங்கு என்ன நடந்தது என்றே எங்களுக்கும், அங்கிருந்த மாவட்ட எஸ்.பிக்குமே தெரியவந்தது. ஆனால், விபத்து நடந்த 5 நிமிடத்திற்குள்ளாகவே செந்தில் பாலாஜி எப்படி நேரலை கேமராக்களுடன் அரசு மருத்துவமனைக்குச் சென்றார்? அவர் என்ன விபத்து நடக்கும் என மருத்துவமனை பக்கத்திலேயே காத்துக் கொண்டிருந்தாரா?

    Advertisement

    மேலும், அன்றைய தினம் இரவு 12 மணிக்கு அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கரூருக்கு வர வேண்டிய அவசியம் என்ன? அதற்கு முந்தைய 5 ஆண்டுகளில் அவர் தனது சொந்த வீட்டு விவகாரங்களைத் தவிர வேறு எதற்காவது இப்படி அவசரமாக நள்ளிரவில் கிளம்பி இருக்கிறாரா? அரை மணி நேரத்திற்குள் எப்படி உங்களால் தனி விமானத்தை தயார் செய்து வைக்க முடிந்தது?

    ஒரே இரவில் 40 பேரின் உடல்களையும் உடற்கூறாய்வு செய்ய குறைந்தது 30 முதல் 40 மருத்துவர்கள் தேவையே, அவர்களை உடனே எங்கிருந்து வரவழைத்தீர்கள்? எங்களின் தவெக தொண்டர்களை மருத்துவமனைக்குள் விடாமல் அடித்து விரட்டியது யார்? ஆதாரங்களை அழிக்கவே அவசர அவசரமாக உடல்கள் அனைத்தும் இரவோடு இரவாகத் தகனம் செய்யப்பட்டன.

    Advertisement

    அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்ய வந்தபோது, அரசு மருத்துவமனைக் கட்டிலுக்குக் கீழே ஒளிந்து கொண்டு, கட்டில் காலைப் பிடித்துக்கொண்டு 'என்னை விட்டுவிடுங்கள்' என்று அழுது கதறியவர் தான் இந்த செந்தில் பாலாஜி. ஊரை ஏமாற்றிப் பணம் பறிக்கத் தெரிந்த இவருக்குத் தவெக அரசை விமர்சிக்க எந்தத் தகுதியும் இல்லை.

    தற்பொழுது கூட தவெக எம்.எல்.ஏ-க்களைக் குதிரை பேரம் பேசி, ஆட்சியை கவிழ்க்க முயன்ற வழக்கில் இவருக்குத் தொடர்புடைய நபர்களிடம் 50 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பிடிபட்டுள்ளது" என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் அடுக்கடுக்காகக் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Minister CTR Nirmal Kumar has alleged that the events surrounding the Karur incident were a staged drama that unfolded within half an hour. Nirmal Kumar questioned how Senthil Balaji managed to reach the hospital in just five minutes and asked why it was necessary for the then Chief Minister MK Stalin to visit Karur at midnight.