சென்னை: சரியாக ஓர் ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள் அரசியலில் இருந்து சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த விஜய் கரூரில் பிரச்சாரத்திற்கு சென்ற போது சொல்ல முடியாத துயரம் நேரிட்டது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி பச்சிளம், குழந்தைகள் பெண்கள் உள்ளிட்ட 41 பேர் பலியான நாள் இன்று.. அன்றிலிருந்து இன்று வரை இந்த வழக்கு எப்படி நடந்தது? இடையில் நடந்த சம்பவங்கள் என்னென்ன? என்பது குறித்து பார்க்கலாம்..
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சி அடையச் செய்தது.
தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவையே உலுக்கிய இந்த கோர சம்பவத்தில் செப்டம்பர் 27ஆம் தேதி முதல் இன்று வரை என்ன நடந்தது இரங்கல் வழக்கு நிதி உதவி சிபிஐ விசாரணை அரசு பணி என சற்று விரிவாக பார்க்கலாம்.. 2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தொடங்கி இருந்தார் விஜய் 27ஆம் தேதி இரவு சுமார் 7 மணி அளவில் வேலுசாமிபுரத்தில் அவர் பங்கேற்ற மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்ட நிலையில் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இரவு 9:45 மணிக்கு தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் ஆனந்த், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது கரூர் நகர் போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர். அடுத்த நாளே திமுக தலைவரும் அப்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அறிவித்து உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஒருவர் குடும்பத்திற்கும் தலா 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். செப்டம்பர் 28ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கரூர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர். அன்றே அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணையை தொடங்கியது. இதில் மதியழகன் மட்டும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இந்த வழக்கு குறித்து உச்ச நீதிமன்றம் தலையிட்டு, விசாரணையை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்டது. அதன் பிறகு சிபிஐ அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கிய நிலையில், வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மாநில புலனாய்வுக் குழுவினர் சிபிஐ வசம் ஒப்படைத்தனர். செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் நெரிசல் சம்பவம் நடைபெற்று 41 பேர் உயிரை இழந்த நிலையில் கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து அதாவது அக்டோபர் 27ஆம் தேதி மாமல்லபுரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் விஜய். கடந்த ஜனவரி 29, 30, 31 ஆகிய மூன்று நாட்களில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளிடம் டெல்லியில் வைத்து சுமார் 19.30 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதேபோல், கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் சிபிஐ வாக்குமூலம் பெற்றது. இந்த விசாரணைகளுக்குப் பிறகு, வழக்கின் அடுத்த கட்டமாக தவெக தலைவர் விஜயை விசாரிக்க சிபிஐ முடிவு செய்தது. அதன்படி, 2026 ஜனவரி 6-ஆம் தேதி அவருக்கு எழுத்துப்பூர்வமாக சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சம்மன் வெளியானதும், விஜய் விசாரணைக்கு நேரில் ஆஜராவாரா, அல்லது நீதிமன்றத்தை நாடுவாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், அனைத்து ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், விஜய் நீதிமன்றத்தை நாடாமல், பொங்கலுக்கு முன் ஒருமுறை மற்றும் ஜனவரி 19ஆம் தேதி முறையாக சிபிஐ விசாரணைக்கு நேரில் ஆஜரானார். விசாரணையின் போது அதிகாரிகள் எழுப்பிய சுமார் 100 கேள்விகளில் பெரும்பாலானவற்றுக்கு, "எனக்கு தெரியாது" என்றே விஜய் பதிலளித்ததாக கூறப்படுகிறது. "கரூர் சம்பவத்தின் பின்னணியில் சதி இருப்பதாக நினைக்கிறீர்களா?" என்ற கேள்விக்கு, சிலர் மீது சந்தேகம் இருப்பதாக விஜய் கூறியதாகவும், அந்த சந்தேகத்துக்குரிய நபர்களின் பெயர்களையும் அவர் குறிப்பிட்டதாகவும் தகவல் வெளியானது. இதேபோல திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி இருந்தார். 2026 ஜூலையில் திமுக தரப்பில் ஆர்.எஸ். பாரதி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த இடைக்கால மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கில் சிபிஐ விசாரணையைத் திசைதிருப்ப முயன்றதாகக் கூறி உச்ச நீதிமன்றம் கடுமையான கேள்விகளை எழுப்பியது. தொடர்ந்து கரூர் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜூலை 10 ஆம் தேதி அரசு பணியாளர்களுக்கான அரசு பணிகளுக்கான ஆணையை நேரடியாக சென்று முதலமைச்சர் விஜய் வழங்கினார். பின்னர் நாம் தமிழர் கட்சி தொடர்ந்த வழக்கால் அரசு பணியாளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை 27ஆம் தேதி உத்தரவிட்டது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. கரூர் சம்பவம் நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் இருக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், பிரபலங்கள் உயிரிழந்தவர்களுக்கு தங்கள் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் விஜயும் தனது மனதில் ஆழமான ரணத்தோடு சொல்ல முடியாத சோகத்தை சுமந்து நிற்பதாக பதிவிட்டிருக்கிறார்.