கரூர் துயரம்.. அமைச்சர்களுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு.. நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

  • சென்னை: கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கில் தவெக அமைச்சர்கள் பொதுவெளியில் கருத்து தெரிவிக்கத் தடை விதிக்க வேண்டும் என்றும், சாட்சிகளை கலைக்க முயற்சிப்பதால் உச்ச நீதிமன்றம் இதில் தலையிட வேண்டும் என்றும் திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர மனுவாக நாளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

    Advertisement

    தற்போது உச்சநீதிமன்றம் கோடைக்கால விடுமுறையில் உள்ளது. இந்த நிலையில், விடுமுறைக் கால அமர்வுகள் மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், இது அவசர வழக்கு என்றும், உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்ட நிலையில், இவ்வழக்கு தொடர்பாக நாளை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

    Advertisement

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து தமிழக முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பொது வெளியில் பேச தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கரூரில் கடந்த 2025 செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று தவெக சார்பில் பிரசாரக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தின் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியின் கண்காணிப்பில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக, முதல்வர் விஜய், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடம் சிபிஐ பல முறை விசாரணை மேற்கொண்டுள்ளது.

    Advertisement

    இந்நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது: கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வரும் நிலையில், வழக்கின் தன்மையை மாற்றும் வகையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொதுவெளியில் தொடர்ந்து அவதுாறான கருத்துகளை பேசி வருகிறார். இது சாட்சிகளை மறைமுகமாக அச்சுறுத்தும் செயல்.

    வழக்கு விசாரணையில் இருக்கும்போதே முதல்வர் விஜய் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதோடு, அரசின் சார்பில் நிதியுதவி மற்றும் பணி நியமன ஆணைகளை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் செயல் சிபிஐயின் நடுநிலையான விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுவதாகும்.

    Advertisement

    விசாரணையின் நம்பகத்தன்மையோ அல்லது சாட்சிகளின் வாக்குமூலங்களோ பாதிக்கப்படாத வகையில், நீதிமன்றம் விதித்துள்ள நடைமுறைகளை பின்பற்றி, சிபிஐயிடம் அந்த திட்டத்தை சமர்ப்பித்த பின்னரே, பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு பணி நியமனங்களை வழங்க மாநில அரசை அனுமதிக்க வேண்டும்.

    மேலும், வழக்கை விசாரித்து வரும் அதிகாரிகள் மற்றும் நீதிமன்றத்தின் மாண்பை குலைக்கும் வகையில், முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் இந்த வழக்கு குறித்து பொதுவெளியில் பேச தடை விதிக்க வேண்டும். இதுதொடர்பான தேவையற்ற விவாதங்களை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரப்புவதை கட்டுப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    Advertisement

    பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கொடுப்பது போன்ற நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் இந்த வழக்கின் சிபிஐ விசாரணை திசை மாறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். இதனைத் தடுக்க வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றம் இதில் தலையிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த மனுவை நாளை விசாரிப்பதாக நீதிபதி அமானுல்லா தெரிவித்துள்ளார்.

    தற்போது உச்சநீதிமன்றம் கோடைக்கால விடுமுறையில் உள்ளது. இந்த நிலையில், விடுமுறைக் கால அமர்வுகள் மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், இது அவசர வழக்கு என்றும், உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்ட நிலையில், இவ்வழக்கு தொடர்பாக நாளை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

    English Summary

    Karur Tragedy: The DMK has filed a petition in the Supreme Court seeking to restrain ministers from making public statements regarding the Karur tragedy. the hearing on this petition is scheduled for tomorrow.