சென்னை: சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் சோகமும் பதற்றமும் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது. ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று மாயமான மீனவர்களில் 9 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள செய்தி வெளியாகி, அவர்களது குடும்பத்தினரை நிலைகுலைய வைத்துள்ளது.
தங்கள் வீட்டு ஆண்களை உயிருடன் மீட்டுத் தர வேண்டும் என மூன்று நாட்களாகக் கதறி அழுது போராடியும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மீனவர்கள் வேதனையுடன் குற்றம்சாட்டுகின்றனர். இந்தச் சூழலில் காசிமேடு பகுதிக்கு வந்த அமைச்சர் மரிய வில்சனை மீனவப் பெண்கள் மற்றும் குடும்பத்தினர் முற்றுகையிட்டு சரமாரியாகக் கேள்வி எழுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காசிமேடு துறைமுகப் பகுதிக்கு அமைச்சர் மரிய வில்சன் வந்ததும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அவரைச் சூழ்ந்து கொண்டனர். தங்களின் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல், பலர் கதறி அழுதபடி அமைச்சரின் கால்களில் விழுந்து தங்கள் வலியை வெளிப்படுத்தினர். "மூன்று நாளா எங்க மனுஷங்கள காணோம்னு கத்தி கதறினோம். கடலோரக் காவல் படையும் அரசும் உடனே தேடியிருந்தால் இன்னைக்கு அவங்க உயிரோடு இருந்திருப்பாங்க. உயிர் போன பிறகு வந்து ஆறுதல் சொல்றீங்களா?" என்று அமைச்சரை நோக்கிக் கண்ணீர் மல்கக் கேள்வி எழுப்பினர். மீனவர்கள் மாயமான தகவல் தெரிந்த உடனேயே கப்பல் அல்லது ஹெலிகாப்டர் மூலம் ஆழ்கடலில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்படவில்லை. தமிழக அரசு தேடிக் கண்டுபிடிக்காமல், ஆந்திர மாநில மீனவர்கள் கடலில் சடலங்களையும் கவிழ்ந்த படகையும் பார்த்து தகவல் சொன்ன பிறகே இங்குள்ள அதிகாரிகளுக்கு விபரம் தெரிந்தது. பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அவசர உதவிக்கான வழிமுறைகளை அரசு நிர்வாகம் முறையாகக் கண்காணிக்கத் தவறிவிட்டது. காசிமேட்டிலிருந்து ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்கள் கடும் கடல் சீற்றத்தில் சிக்கியுள்ளனர். அவர்கள் மாயமானதை உணர்ந்த குடும்பத்தினர் மீன்வளத்துறை அலுவலகத்திற்கும் காவல்துறைக்கும் தொடர்ந்து தகவல் கொடுத்துள்ளனர். ஆனால், தேடுதல் பணியில் அரசு காட்டிய தாமதமே பல உயிர்கள் பறிபோகக் காரணம் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஆந்திர கடற்பகுதியில் சடலங்கள் மிதப்பதாக ஆந்திர மீனவர்கள் வீடியோ எடுத்து தகவல் அனுப்பிய பிறகே, தமிழக அதிகாரிகள் விழித்துக் கொண்டு மீட்புப் பணிகளைப் பற்றிப் பேசத் தொடங்கினர் என்ற உண்மை மீனவ சமுதாயத்தை மிகுந்த ஆத்திரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் மற்றொரு பெரிய அதிர்ச்சி என்னவென்றால், மீனவர்களின் பிரச்சனைகளுக்குப் பொறுப்பேற்க வேண்டிய துறை சார்ந்த மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் களத்திற்கே வரவில்லை என்ற குற்றச்சாட்டுதான். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் வந்து சந்தித்தது உள்ளூர் சட்டமன்ற உறுப்பினரும் நிதியமைச்சருமான மரிய வில்சன் மட்டுமே. "நாங்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் எங்கே போனார்? பதவி ஏற்ற பிறகு துறைமுகப் பக்கமே அவரைக் காணவில்லை. இவ்வளவு பெரிய இழப்பும் துயரமும் நடந்திருக்கும் போது, மீன்வளத்துறை அமைச்சர் எங்களை நேரில் பார்க்க வராமல் எங்கே பதுங்கி இருக்கிறார்?" என மீனவ அமைப்புகளும் பொதுமக்களும் கொந்தளிப்புடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். துறை சார்ந்த அமைச்சர் உடனடி நடவடிக்கை எடுத்து முகாமிட்டு மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டிருக்க வேண்டும்; ஆனால் அவரிடம் இருந்து எந்த நேரடி கள ஆய்வும் இல்லாதது மீனவர்களிடையே கடுமையான அதிருப்தியை உருவாக்கியுள்ளது. அமைச்சரை முற்றுகையிட்ட மக்களிடம் பேசிய மரிய வில்சன், "மீனவர்களை மீட்க அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது; உயிரிழந்தவர்களின் உடல்களை சொந்த ஊருக்குக் கொண்டுவரவும், குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து நிவாரண உதவிகளை வழங்கவும் அரசு தயாராக உள்ளது" என சமாதானம் செய்ய முயன்றார். இருப்பினும், "எங்களுக்கு நிவாரணப் பணம் முக்கியமல்ல; எங்கள் குடும்பத்தலைவர்களின் உயிர்தான் முக்கியம். கடலுக்குப் போகும் எளிய மீனவர்களின் உயிருக்கு அரசு தரும் பாதுகாப்பு இவ்வளவுதானா?" என்ற காசிமேடு மக்களின் கூக்குரல் ஒட்டுமொத்த நிர்வாக அமைப்பிற்கும் விடுக்கப்பட்ட நேரடிக் கேள்வியாகவே எதிரொலிக்கிறது."உயிர் போன பிறகுதான் வருவீர்களா?" - அமைச்சரைச் சூழ்ந்த மக்கள்
அமைச்சரிடம் மக்கள் வைத்த முக்கியக் குற்றச்சாட்டுகள்
ஆந்திர மீனவர்கள் தகவல் சொல்லும் வரை என்ன நடந்தது?
மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் எங்கே? வெடிக்கும் அதிருப்தி
அரசு தரப்பு விளக்கம் மற்றும் அடுத்தகட்ட நிலைமை