அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து?

  • சென்னை: தமிழக அரசியலில் தொடர்ந்து புதிய திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழியை சுற்றி புதிய அரசியல் யூகங்கள் கிளம்பியுள்ளன. குறிப்பாக, தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக அவர் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருவது திமுக வட்டாரத்திலும் அரசியல் களத்திலும் பேசுபொருளாக மாறியுள்ளது. மதுரை மேயர் பதவியை குறிவைத்து கயல்விழி காய்நகர்த்தி வரும் நிலையில், அதற்கு அழகிரிக்கு விருப்பமில்லை என்கின்றனரர் அவரது ஆதரவாளர்கள்.

    Advertisement

    கருணாநிதியின் மூத்த மகனான மு.க.அழகிரி, தென் தமிழகத்தில் ஒருகாலத்தில் திமுகவின் மிக முக்கிய சக்தியாக கருதப்பட்டவர். மதுரை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் கட்சியின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பங்கை மறுக்க முடியாது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

    Advertisement

    இருப்பினும், கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர் நீண்ட காலமாக திமுக அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்து வருகிறார். இந்த நிலையில், அழகிரியின் மகள் கயல்விழி சமீப காலமாக தனது தந்தைக்கு நேர்ந்த அரசியல் புறக்கணிப்பு குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார்.

    தமிழக வெற்றிக் கழகம்

    திமுக வளர்ச்சிக்காக தனது தந்தை கடுமையாக உழைத்ததாகவும், ஆனால் அவருக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும் அவர் ஆதங்கம் தெரிவித்தார். அதே நேரத்தில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் குறித்து அவர் வெளியிட்ட பாராட்டு கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. புதிய தலைமுறையை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவராக விஜயை அவர் பாராட்டியிருப்பதும், தமிழக அரசியலில் மாற்றத்திற்கான எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியிருப்பதும் பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளது.

    Advertisement

    கயல்விழி அழகிரி

    இதனிடையே, கயல்விழி தமிழக வெற்றி கழகத்தில் இணையலாம் என்ற தகவல்களும் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மதுரை மாநகர அரசியலில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு இருப்பதாகவும், உள்ளாட்சி அரசியலில் தனது அரசியல் பயணத்தை தொடங்கும் எண்ணம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் தகவல்களின்படி, மதுரை மாநகராட்சியை மையமாகக் கொண்டு எதிர்கால அரசியல் திட்டங்களை கயல்விழி ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. அதனால் தான் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றபோது அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் கயல்விழி.

    மு க அழகிரி

    தென் மாவட்டங்களில் அழகிரிக்கு இருந்த ஆதரவு வட்டாரத்தை அரசியல் ரீதியாக மீண்டும் ஒருங்கிணைக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மறுபுறம், திமுகவில் இருந்து நீண்ட காலமாக விலகி இருந்தாலும், அழகிரி குடும்பத்தின் ஒவ்வொரு அரசியல் நகர்வும் இன்னும் கவனிக்கப்படும் ஒன்றாகவே உள்ளது. குறிப்பாக, கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் வேறு அரசியல் தளத்தில் செயல்படுவது திமுகவுக்கு சின்ன அளவிலாவது சவாலாக அமையலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

    விஜய்

    கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட சென்னை தலைமைச் செயலகத்தில் விஜயை சந்திக்க சென்றார் கயல்விழி. ஆனால் அங்கிருந்த அமைச்சர்களை மட்டும் சந்தித்து விட்டு திரும்பினார். விஜயை சந்திக்கவில்லை. இதற்கு காரணம் அழகிரியின் முன்னாள் ஆதரவாளர் என சொல்லப்படுகிறது. கயல்வழி வந்திருக்கும் தகவலை அழகிரியின் முன்னாள் பிஆர்ஓ ஆன பாஸ்கரன் அவருக்கே தொடர்பு கொண்டு சொன்னதாக சொல்லப்படுகிறது. இதை அடுத்து விஜயை சந்திக்க விடாமல் வீட்டிற்கு அனுப்பி வைக்கச் சொன்னாராம் அழகிரி.

    Advertisement

    மதுரை மேயர்

    ஆனால் கயல்விழி தமிழக வெற்றி கழகத்தில் சேர்வதில் உறுதியாக இருக்கிறாராம். தமிழக வெற்றி கழகத்தில் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்து மதுரை மாநகராட்சி மேயராக வேண்டும் என்பதுதான் அவரது திட்டம் என்கின்றனர். அதே நேரத்தில் அழகிரிக்கு இதில் விருப்பம் இல்லாத நிலையில் மகளின் விருப்பத்திற்கு குறுக்கே நிற்கவும் விரும்பவில்லை. அதே நேரத்தில் திமுகவை தவிர்த்து வேறு கட்சிக்கு செல்வதற்கும் தயங்குகிறாராம்.

    அழகிரி குடும்பம்

    ஆனால் இதுவரை கயல்விழி எந்த அரசியல் கட்சியிலும் அதிகாரப்பூர்வமாக இணைந்ததாக அறிவிக்கப்படவில்லை. மேலும், அவரது எதிர்கால அரசியல் முடிவு குறித்து குடும்பத்தினரிடமிருந்தும் உறுதியான தகவல் வெளியாகவில்லை. எனவே, தற்போது பரவி வரும் தகவல்கள் அனைத்தும் அரசியல் யூகங்களாகவே பார்க்கப்படுகின்றன. எனினும், தமிழக அரசியல் வேகமாக மாறிவரும் இந்த சூழலில், அழகிரி குடும்பத்தின் அடுத்த அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    Advertisement

    நேரடியாக அரசியல்

    குறிப்பாக, கயல்விழி நேரடியாக அரசியலில் களம் இறங்குவாரா, அல்லது தனது தந்தையின் அரசியல் செல்வாக்கை புதிய பாதையில் கொண்டு செல்ல முயற்சிப்பாரா என்பது வரும் மாதங்களில் தெளிவாகும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். தந்தையால் எட்ட முடியாத அரசியல் இலக்கை மகள் எட்டுவாரா? அல்லது இது வெறும் அரசியல் யூகமாகவே முடிந்துவிடுமா? என்ற கேள்விகளுக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

    English Summary

    Political buzz intensifies over Kayalvizhi Alagiri’s future plans as discussions emerge about her possible entry into active politics.