சென்னை: சென்னை அடையாறு எஸ்பிஐ வங்கிக் கிளை மேலாளரின் கன்னத்தில் அறைந்த விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகள் கயல்விழியிடம் சாஸ்திரி நகர் போலீஸார் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை அடையாறு பகுதியில் கயல்விழிக்குச் சொந்தமான வணிகக் கட்டடத்தில் வங்கியின் வெளிநாடு வாழ் இந்தியர் கிளை இயங்கி வருகிறது. இந்த கட்டடத்தில் லிப்ட் பழுதானதால் கிளை மேலாளர் ஹர்ஷீன் சிங் கட்டட பராமரிப்பாளரை தொடர்பு கொள்ள முயன்றாராம்.
அப்போது அவர் தரப்பில் இருந்து முறையான பதில் வராததால் மேலாளர் ஹர்ஷீன் சிங் கட்டட உரிமையாளரான கயல்விழிக்கு போன் செய்து லிப்ட் பழுது குறித்து தெரிவித்தாராம். லிப்ட் பழுதானதற்கு தனக்கு நேரடியாக போன் செய்ததால் கயல்விழி ஆத்திரமடைந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் கடந்த 20ஆம் தேதி அடையாறில் உள்ள வங்கிக் கிளைக்கு நேரில் சென்றார். அங்கு மேலாளர் அறையில் அவரிடம் கயல்விழி வாக்குவாதம் செய்துக் கொண்டிருந்த நிலையில் மேலாளர் கன்னத்தில் கைகளை வைத்தபடி பார்த்ததால் மேலும் ஆத்திரமடைந்த கயல்விழா வங்கி மேலாளரின் கன்னத்தில் ஓங்கி அறைந்ததாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் வங்கியில் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது சமூகவலைதள பக்கத்திலும் பரவியது. இந்த சம்பவம் குறித்து வங்கி மேலாளர் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து சிசிடிவி ஆதாரங்களை காட்டினார். இதையடுத்து எஸ்பிஐ வங்கியின் முதன்மை மேலாளர் நமச்சிவாயம் அடையாறு காவல் நிலையத்தில் கயல்விழிக்கு எதிராக முறைப்படி புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், தகாத வார்த்தைகளால் பேசுதல், தாக்குதல் நடத்துதல், மிரட்டல் விடுத்தல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் கயல்விழி அழகிரி மீது அடையாறு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில் இன்று கயல்விழிக்கு சம்மன் அனுப்பிய சாஸ்திரி நகர் போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.