காங்கிரஸ் யாரையும் முதுகில் குத்தாது.. தவெகவில் இருந்து வந்த ஆஃபர்! கே.சி. வேணுகோபால் சொன்ன தகவல்

  • சென்னை: தமிழ்நாட்டில் தற்போது மாற்றத்திற்கான காலம் உருவாகியுள்ளது என்றும், காங்கிரஸ் தொண்டர்கள் கடுமையாக உழைத்து, ஏழை மற்றும் அடித்தட்டு மக்களுடன் தொடர்ந்து நிற்க வேண்டும் என்றும் அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் எப்போதும் யாரையும் முதுகில் குத்தாது என்றும் திமுக விமர்சனங்களுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

    Advertisement

    சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் பல மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். மூத்த தலைவரான கே.சி வேணுகோபாலும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், 2029 நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி பிரதமராவது உறுதி என்று அவர் கூறினார்.

    Advertisement

    கேசி வேணுகோபால்

    அவர் மேலும் பேசுகையில், "ராகுல் காந்தியை பிரதமராக ஏற்று கொள்ள இந்தியா தயாராக இருக்கிறது. தமிழ்நாடும் அதற்கு தயாராக இருக்கிறது. ஆனால் காங்கிரஸ்காரர்களாகிய நாம் தயாராக இருக்கிறோமா என்பதுதான் கேள்வி.. காங்கிரஸ் தொண்டர்கள் மக்களுடன் இருக்க வேண்டும். குறிப்பாக ஏழை மக்களுக்காக செயல்பட வேண்டும். ஆட்சியில் கிடைக்கும் வாய்ப்புகளை தமிழக மக்களின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் காங்கிரஸின் பொற்காலம் மீண்டும் வரும்.

    உழைத்தால் மட்டுமே பதவி

    ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களை வலுப்படுத்திக் கொள்வதற்காகவும், அதிகாரத்தில் இடம் பெறுவதற்காகவும் தான் செயல்படுகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இருந்தாலும் தனது கொள்கைகளை ஒருபோதும் கைவிடாது. ஆட்சியிலும் அதிகாரத்திலும் கூட்டணியுடன் இருக்கிறோம். ஆனால் எங்களது கொள்கைகளை ஒருபோதும் நீர்த்து போக செய்ய மாட்டோம். அந்த கொள்கைகளுடன் தமிழ்நாட்டுக்காகவும், இந்தியாவுக்காகவும் போராடுவோம். தமிழகத்தில் காங்கிரஸ் நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இனி கட்சியில் தீவிரமாக பணியாற்றும் உறுப்பினர்களுக்கு மட்டுமே பொறுப்புகளும் பதவிகளும் வழங்கப்படும்" என்றார்.

    Advertisement

    முதுகில் குத்த மாட்டோம்

    கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சிலர் விமர்சித்து வருவதாக குறிப்பிட்ட அவர், "நாங்கள் முதுகில் குத்திவிட்டோம். ஏமாற்றிவிட்டோம் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சி ஒருபோதும் யாரையும் ஏமாற்றாது. யாரையும் முதுகில் குத்துவது காங்கிரசின் பழக்கம் இல்லை. தேர்தலுக்கு முன்பு தமிழக வெற்றி கழகத்தில் இருந்து பல்வேறு ஆஃபர்கள் எங்களுக்கு வந்தது. சட்டமன்ற உறுப்பினர் பதவி, மாநிலங்களவை பதவி, உள்ளாட்சி அமைப்புகளில் அதிகார பங்கீடு என எதுவாக இருந்தாலும் இணைந்து செயல்படலாம் என கூறினர். ஆனால் கூட்டாட்சி தத்துவம் மற்றும் சமூக நீதியை பாதுகாக்க திமுகவுடன் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.

    Advertisement

    காங்கிரஸ் எடுத்த முடிவு

    தமிழ்நாட்டில் முன்வாசல் வழியாகவோ, பின்வாசல் வழியாகவோ பாஜக ஆட்சிக்குள் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸ் தேர்தலுக்கு பிறகு நிலைப்பாட்டை எடுத்தது. தமிழ்நாட்டில் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான ஆட்சி நடைபெற்று வருகிறது. அதற்கு காங்கிரஸ் ஆதரவாக இருக்கிறது.

    காங்கிரஸ் தலைவர் கார்கேவை அவமதிக்கும் செயலில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளனர். அவரது நீண்ட அரசியல் பயணத்தை கருத்தில் கொள்ளாமல் பாஜக அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். காங்கிரஸ் தலைமைக்கு எதிராக இதுபோன்ற நடவடிக்கைகள் நடைபெறும் போது தொண்டர்கள் ஆக்டிவாக இருக்க வேண்டும்.

    Advertisement

    இறுதியில் ஒன்றை மட்டும் சொல்லி கொள்கிறேன். மாற்றத்திற்கு தயாராக இருங்கள்.. வெற்றிக்கு தயாராக இருங்கள். நாம் நாடு முழுக்க வெல்ல போகிறோம்.. நாடு முழுக்க ஆட்சி செய்ய போகிறோம்.. அனைத்திற்கும் தயாராக இருங்கள்" என்றார்.

    English Summary

    Congress general secretary KC Venugopal said Tamil Nadu is entering a period of political change(திமுகவுக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ்): Congress will never backstab anyone says KC Venugopal.