“அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் ஒரு நேரடியான கேள்வி.. பதில் சொல்லுங்க”.. அமைச்சர் கீர்த்தனா ரிப்ளை

  • சென்னை: அரசு பள்ளியில் அமைச்சர் கீர்த்தனா ஆய்வு செய்தபோது ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு மாணவி தடுமாறிய நிலையில் அதுபற்றி ஆசிரியரிடம் பேசிய வீடியோ வைரலான நிலையில், அமைச்சரின் செயலை விமர்சித்திருந்தார் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ். இந்நிலையில் "இந்த அவலநிலை ஏன் உருவானது என்பதற்கு மக்களுக்குப் பதில் சொல்லுங்கள்" என அன்பில் மகேஷுக்கு அமைச்சர் கீர்த்தனா கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, வகுப்பறைக்குச் சென்ற அமைச்சர் கீர்த்தனா அங்கிருந்த மாணவிகளிடம் ஆங்கிலத்தில் சில கேள்விகளைக் கேட்டுள்ளார். அப்போது அமைச்சரின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் மாணவிகள் சிலர் திணறியதாக கூறப்படுகிறது.

    Advertisement

    இதையடுத்து அமைச்சர் கீர்த்தனா ஆசிரியர்களிடம் ஆங்கிலம் கற்றுத் தருமாறு அறிவுறுத்தியதோடு, "முதல் பெஞ்ச் மாணவியே இப்படி இருக்கும்போது லாஸ்ட் பெஞ்ச் மாணவிகளை நினைத்துப்பாருங்கள்" எனக் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள் எனக் கூறியிருந்தார்.

    இந்நிலையில், அமைச்சர் கீர்த்தனா வெளியிட்டுள்ள பதிவில், "இது ஒரு பள்ளியின் அவலநிலை மட்டுமல்ல; பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகள் எவ்வாறு புறக்கணிக்கப்பட்டன என்பதற்கான சாட்சியம்! முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் ஒரு நேரடியான கேள்வி:

    Advertisement

    கழிப்பறை இல்லை, உடற்கல்வி ஆசிரியர் இல்லை, கணினி ஆசிரியர் இல்லை, பள்ளி வளாகம் முழுவதும் புதர்கள் மண்டித் கிடக்கின்றன... இப்படிப்பட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாத அரசுப் பள்ளிகள் இருந்தபோது, உங்களுடைய முன்னுரிமை எங்கே இருந்தது? இன்று இந்த நிலையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர்களைக் குறை கூறுவதற்குப் பதிலாக, இந்த அவலநிலை ஏன் உருவானது என்பதற்கு மக்களுக்குப் பதில் சொல்லுங்கள்.

    நான் சிவகாசி அரசுப் பள்ளிக்குச் சென்றது அரசியல் செய்வதற்காக அல்ல. அது என் தொகுதி! அந்த மாணவர்களின் குரலைச் சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கொண்டு சேர்ப்பது என் உரிமையும், என் கடமையுமாகும்.

    Advertisement

    நான் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் படித்தவள். இன்று அந்தக் குழந்தைகளில் ஒருத்தியாகவே என்னைப் பார்க்கிறேன். உயர்கல்விக்கும், கார்ப்பரேட் உலகிற்கும் நான் சென்றபோது, அரசுப் பள்ளியில் படித்துவிட்டு வரும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை நானே நேரடியாக அனுபவித்திருக்கிறேன். அதனால்தான், இந்த மாணவர்களின் எதிர்காலம் எனக்கு அரசியலைவிட மிக முக்கியமானது!

    தமிழ்நாட்டின் எதிர்காலம் இந்த மாணவர்களின் கைகளில்தான் இருக்கிறது. அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் விட்டுவிட்டு, உண்மையைச் சொல்பவர்களைக் குறை கூறுவது தீர்வாகாது.

    மேலும் ஒரு விஷயம்... இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவை எடுத்தது எங்கள் குழு அல்ல; என்னுடன் வந்திருந்த ஊடகங்கள்தான் அந்தக் காட்சிகளைப் பதிவு செய்தன. ஆகவே, வீடியோவை யார் எடுத்தார்கள் என்பதல்ல இங்கே கேள்வி; அந்த வீடியோவில் ஏன் அப்படிப்பட்ட அவலநிலை இருந்தது என்பதுதான் உண்மையான கேள்வி!

    Advertisement

    என் மீது பொய்யான கதைகளைக் கட்டி, மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முயற்சிப்பதை விடுத்து, பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்துவதே இப்போதைய தேவை.

    முதலமைச்சர் விஜய் வழிகாட்டுதலிலும், தற்போதைய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுடனும் இணைந்து, இந்த நிலையை மாற்றுவதற்காகவே நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம். அரசியல் என்பது உண்மையை மூடிமறைப்பது அல்ல; நம் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதுதான்!" எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    A video went viral showing Minister Keerthana questioning a student—who struggled to answer in English—during an inspection at a government school and subsequently discussing the matter with the teacher; former Minister Anbil Mahesh had criticized the Minister's actions regarding this incident. In response, Minister Keerthana has now challenged Anbil Mahesh, asking him to explain to the public why such a deplorable situation arose in the first place.