கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ 48 லட்சம் பரிசு! குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த விஜய்

  • சென்னை: "கீர்த்தி சக்ரா" விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ. மீனாட்சி சுந்தரத்தின் அசாத்திய வீரத்தைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.48 லட்சத்திற்கான காசோலையை வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறப்பித்தார்.

    Advertisement

    தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று (15.6.2026) தலைமைச் செயலகத்தில், இந்திய அரசின்
    "கீர்த்தி சக்ரா" விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ. மீனாட்சி சுந்தரத்தின் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் வெளிப்படுத்திய அசாத்திய வீர தீரச் செயலைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் 48 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

    Advertisement

    இந்திய இராணுவத்தின் பீரங்கிப் படைப்பிரிவில் பணியாற்றி வரும் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லான்ஸ் நாயக் அ. மீனாட்சி சுந்தரம் டிசம்பர் 19, 2024 அன்று ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திலுள்ள குல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது, பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் முகம் மற்றும் தோள்பட்டையில் பலத்த காயம் அடைந்த நிலையிலும், தனது கடமையிலிருந்து தவறாமல் தொடர்ந்து போராடி, பயங்கரவாதிகளை வீழ்த்தினார்.

    அவரது அசாத்திய வீர தீரச் செயலைப் பாராட்டி இந்தியாவின் இரண்டாவது உயரிய அமைதிக்கால வீர விருதான
    கீர்த்தி சக்ரா விருதினை, குடியரசுத் தலைவர் கடந்த 8.6.2026 அன்று புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் வழங்கிச் சிறப்பித்தார்.

    Advertisement

    தேசத்தின் பாதுகாப்பிற்காகத் தனது இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட இந்திய ராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ. மீனாட்சி சுந்தரத்தின் நாட்டுப்பற்று, துணிச்சல், கடமை உணர்வு தமிழ் மண்ணிற்குப் பெருமை சேர்ப்பதோடு, இளம் தலைமுறையினரிடையே வீர உணர்வு மற்றும் தியாக மனப்பான்மையை வளர்த்திடும் வகையில் அமைந்துள்ளது.

    பல்வேறு வீர தீரச் செயல்களுக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த பாதுகாப்புப் படை வீரர்கள் விருதுகளைப் பெறுகின்றபோது, அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு அவர்கள் பெற்ற விருதுகளுக்கேற்ப ரொக்கப் பரிசு வழங்கிச் சிறப்பித்து வருகிறது.

    அவ்வகையில், உயரிய விருதான "கீர்த்தி சக்ரா" விருது பெற்ற இராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ. மீனாட்சி சுந்தரத்திற்கு, தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு அரசின் சார்பில் 48 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி, தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.

    Advertisement

    இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு மனிதவள மேலாண்மைத் துறை மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை அமைச்சர் த. சரத்குமார், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், இ.ஆ.ப., பொதுத்துறை முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், இ.ஆ.ப., பொதுத்துறை சிறப்புச் செயலாளர் மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை இயக்குநர் எ. சுந்தரவல்லி இ.ஆ.ப., முன்னாள் படைவீரர் நலத்துறை இணை இயக்குநர் மேஜர் எம். சுரேஷ், இராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ. மீனாட்சி சுந்தரத்தின் குடும்பத்தினர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்வில் மீனாட்சி சுந்தரத்தின் குழந்தையை தூக்கிய விஜய், அக்குழந்தையை கொஞ்சி மகிழ்ந்தார். மேலும் முதல்வர் நாற்காலியில் விஜய் உட்கார்ந்த போதும் அந்த குழந்தையை மடியில் வைத்திருந்தார்.

    English Summary

    Tamil Nadu Chief Minister Joseph Vijay honoured Keerthi Chakra award recipient and Tamil Nadu Army soldier Lance Naik A. Meenakshi Sundaram by presenting a cheque of ₹48 lakh in recognition of his extraordinary bravery and service to the nation.