“அரசியல் விளையாட்டில் பெண்கள் பகடைக்காய் அல்ல” நயினார் நாகேந்திரனுக்கு பாஜகவின் நடிகை குஷ்பு கண்டனம்

  • சென்னை: முதலமைச்சர் விஜய் குறித்து அநாகரீகமாக பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. நடிகையும், பாஜக. மாநில துணைத் தலைவருமான குஷ்பு, நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    சென்னையில் தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், "சட்டப்பேரவையில் அப்பாவை காணோம் என தேடும் முதலமைச்சர் விஜய்" எனக் குறிப்பிட்டு பேசியிருந்தார்.

    Advertisement

    "சட்டப்பேரவைக்கு சென்று, 'அப்பா எங்கே? அப்பா எங்கே?' என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள். வீட்டுக்குச் சென்று அம்மாவிடம் கேட்டால்தான் அப்பா யாரென்று சொல்லுவார். ஆனால், இவர்கள் சட்டப்பேரவைக்கு வந்து அப்பாவைத் தேடினால் யாருக்குத் தெரியும்? இப்படிப்பட்டவர்களின் ஆட்சிதான் இன்று நடந்து கொண்டிருக்கிறது." எனப் பேசியிருந்தார் நயினார் நாகேந்திரன்.

    அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நயினார் நாகேந்திரனின் இந்தப் பேச்சுக்கு அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம் தெரிவித்துள்ளார். வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை, "தமிழ்நாட்டின் அரசியல் களத்தை அநாகரிகமாக்கும் பேச்சுகள் தொடர்ந்து அரங்கேறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது" எனத் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இதுதொடர்பாக நடிகையும், பாஜக மாநிலத் துணைத் தலைவருமான குஷ்பு எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழக முதலமைச்சரின் தாயார் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்த தரக்குறைவான கருத்து அருவருப்பானது. எந்த ஒரு தளத்திலும் இத்தகைய கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

    எனது தலைவரும் இந்திய பிரதமருமான நரேந்திர மோடி எப்போதும் 'நாரி சக்தி' (பெண் சக்தி) குறித்தே பேசி வருகிறார். பெண்களை மிகுந்த மரியாதையுடன் நடத்தி வருகிறார். இத்தகைய கருத்துகள் மிகவும் கீழ்த்தரமானவை.

    பெண்களின் கண்ணியம் மற்றும் நேர்மையை அவமதிப்பதையோ அல்லது கேள்விக்கு உள்ளாக்குவதையோ ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதவள் நான். எப்போதும் என் கருத்துகளைத் துணிச்சலுடன் வெளிப்படுத்தி வந்துள்ளேன். இதைக் கேட்டு நான் இன்று அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளேன்.

    Advertisement

    கட்சியை விமர்சியுங்கள், மக்களுக்காகக் குரல் கொடுங்கள், அரசு செயல்படத் தவறினால் அதைத் தாக்கிப் பேசுங்கள். ஆனால் உங்கள் கருத்தை முன்வைக்க ஒருபோதும் ஒரு பெண்ணைப் பயன்படுத்தாதீர்கள். அரசியல் விளையாட்டில் பெண்கள் பகடைக்காய்கள் அல்ல. ஒவ்வொரு கட்சியும், அக்கட்சியின் உறுப்பினர்களும், ஒவ்வொரு ஆணும் ஒரு பெண்ணை அவமதிக்கும் முன் சிந்திக்க வேண்டும்.

    நினைவில் கொள்ளுங்கள், ஒரு பெண்ணின் ஒரு தாயின் காரணமாகவே நீங்கள் இந்த உலகில் இருக்கிறீர்கள். ஒரு தாய்க்கு இழைக்கப்படும் இத்தகைய அவமரியாதை மிகுந்த வேதனையையும் மனக்காயத்தையும் ஏற்படுத்துகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே சர்ச்சை பேச்சு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள நயினார் நாகேந்திரன்,, "ஒரே நாடு 2.0 பத்திரிக்கை வெளியீட்டு விழாவின் போது நான் மேடையில் பேசிய பேச்சைத் திரித்து சித்தரித்து, அரசியல் ஆதாயம் தேட நினைப்பவர்களுக்கு நான் தெரிவிப்பது என்னவென்றால், எந்தவிதமான உள்நோக்கத்துடனும் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. தாய் மீதும், தாய் நாட்டின் மீதும், தாய்மொழி மீதும் மிகுந்த அக்கறை கொண்டவன் நான்" என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    A fresh controversy has erupted following BJP State President Nainar Nagendran's uncivil remarks regarding Chief Minister Vijay. Actress and BJP State Vice President Khushbu has condemned Nagendran's comments.