கிட்னி திருட்டில் ஈடுபட்ட கல்லூரிகள், டாக்டர்கள் மீது வழக்கு பதியப்பட்டுவிட்டது - அமைச்சர் அருண்ராஜ்

  • சென்னை: கிட்னி திருட்டில் ஈடுபட்ட கல்லூரிகள் மற்றும் மருத்துவர்கள் மீது நாமக்கல் நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டுவிட்டது, என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜ் தெரிவித்தார்.

    Advertisement

    நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு மற்றும் திருச்சி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில், நெசவு கூலி தொழிலாளர்களிடம் கிட்னி திருட்டு நடந்த சம்பவம், கடந்த ஆண்டு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாக சர்ச்சை எழுந்தது.

    Advertisement

    இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணையை தற்போதைய தவெக அரசு துவங்கி உள்ளது. ஏற்கனவே, இந்த முறைகேட்டில் தொடர்புடையவர்கள் முன்னாள் அமைச்சர்களாக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் எச்சரித்து இருந்தார்.

    இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண் ராஜ், "கிட்னி திருட்டில் ஈடுபட்ட கல்லூரிகள் மற்றும் மருத்துவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு விட்டது. நாமக்கல் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது." எனத் தெரிவித்துள்ளார்.

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், திருச்சி மற்றும் ஈரோடு அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏழை விசைத்தறி தொழிலாளர்களைக் குறி வைத்து நடந்த கிட்னி திருட்டு சம்பவம் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    Advertisement

    இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்க தமிழ்நாடு சுகாதாரத் துறை திட்ட இயக்குநர் வினீத் தலைமையில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சிறப்பு குழு அமைத்தது. இந்த குழுவின் முதற்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில், பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லுரி மருத்துவமனை மற்றும் திருச்சி சிதார் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில், புதிய அரசு பொறுப்பேற்றதையடுத்து தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை விசாரணையை மீண்டும் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தான் கிட்னி திருட்டு விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Health Minister Arun Raj stated that a case has been filed in the Namakkal court against the colleges and doctors involved in kidney theft.