கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் - ரயில் நிலையம்.. சட்டென நடந்த நல்ல மாற்றம்.. தீபாவளி பரிசு உறுதி?

  • சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டி திறக்கப்பட்டு 3 ஆண்டுகளை தொட்டுவிட்டது. ஆனால் இன்னமும் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறக்கப்படாமல் இழுத்துக் கொண்டே செல்கிறது. கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை திறக்க வேண்டும் என்றால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துடன் இணைத்து அமைக்கப்பட்டு வரும் ஆகாய நடைபாதையை திறக்க வேண்டும். அப்படி திறந்தால் தான் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறக்கப்படும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்கள். தற்போது ஆகாய நடைபாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன. வருகிற நவம்பர் அல்லது டிசம்பருக்குள் செயல்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தீபாவளிக்குள் வந்தால் அது பெரிய குட்நியூஸ் ஆகும்.

    Advertisement

    கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் தான் ஒவ்வொரு நாளும் மக்கள் வெளியூர் பேருந்துகளை தேடி வருகிறார்கள். சென்னையின் கோயம்பேட்டில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்திலும், தாம்பரத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரத்திலும், வேளச்சேரியில் இருந்து 26 கிமீ தூரத்திலும், மயிலாப்பூரில் இருந்து சுமார் 34 கிமீ தூரத்திலும், சென்ட்ரலில் இருந்து 34 கிமீ தூரத்திலும் இருக்கிறது கிளாம்பாக்கம். கிளாம்பாக்கத்திற்கு பேருந்தில் தான் வர முடியும். குறைந்தது ஒருமணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை ஆகும். பீக் அவர்ஸ்களில் மயிலாப்பூர் மற்றும் சென்டரலில் இருந்து வர குறைந்தது ஒன்றரை மணி நேரம் முதல் 2 மணி நேரம் தாரளமாக எடுக்கிறது.

    Advertisement

    மக்கள் குற்றச்சாட்டு

    சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட கிளாம்பாக்கம் பஸ் நிலையம் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கிறது. வண்டலூருக்கு மிக அருகில் உள்ள இந்த பேருந்து நிலையத்தை அடைய ரயில் வசதிகள் பக்கத்திலேயே இருந்தும் ரயில் நிலையம் இல்லாத காரணத்தால் பேருந்தில் தான் மக்கள் பயணித்து வருகிறார்கள். கிளாம்பாக்கத்தில் தற்போது தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நகர்ப்பகுதிகளில் இருப்பவர்கள் பஸ் நிலையத்தை அடைவதற்கு சிரமமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைத்தே வருகிறார்கள்.

    ஆகாய நடைபாதை

    இதையடுத்து நகர்ப்பகுதி மக்களை இணைக்க புதிய ரயில் நிலையமும், அந்த ரயில் நிலையத்தையும், பஸ் நிலையத்தையும் இணைக்க ஆகாய நடைபாதையும் அமைக்கப்படும் என திமுக அரசு அறிவித்தது. இந்த திட்டத்துக்கு மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல் வடிவம் கொடுத்து வருகின்றன. 2024-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பணிகள் தற்போது வரை நிறைவு பெறவில்லை. புதிய ரயில் நிலையப் பணிகள் வேகம் எடுத்து அது முடிந்து திறப்பு விழாவுக்கு தயாராக இருக்கிறது. ஆனால் ரயில் மற்றும் பஸ் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை பணிகளை நிறைவடையாததால் அதையும் பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    முடிவை நோக்கி பணிகள்

    ஆகாய நடைபாதை பணிகள் ஆகாய நடைபாதை வடிவமைப்பில் இருந்த சிக்கல் மற்றும் நிலம் கையகப்படுத்துதலில் தடை மற்றும் வழக்குகள் போன்றவற்றாலும் ஆகாய நடைபாதை பணிகளில் தொய்வு ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது ஆகாய நடைபாதை அமைக்கும் பணிகள் வேகம் எடுத்திருக்கின்றன. ஜி.எஸ்.டி. சாலையில் ஒருபுறம் ஆகாய நடைபாதை பாலம் தூக்கிவைக்கப்பட்டுவிட்ட நிலையில், மறுபுறம் வைப்பதற்கான நடைபாதை பாலமும் தயாராகி வருகிறது. விரைவில் அதையும் தூக்கி வைத்தால் பணிகள் நிறைவடையும் சூழலை நெருங்கிவிடும்.

    நவம்பரில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம்

    நவம்பர் மாதம் மேலும் ரயில் நிலையத்தில் இருந்து இந்த ஆகாய நடைபாதையை இணைப்பதற்கான பணியையும் ரயில்வேத்துறை நிறைவு செய்வதற்கு தயாராக இருக்கிறது. கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையம் திறப்பு விழா காணுவதற்கு, ஆகாய நடைபாதைக்கான தற்போதைய பணிகள் கிரீன் சிக்னலை தந்துள்ளன. வருகிற நவம்பர் அல்லது டிசம்பருக்குள் புதிய ரயில் நிலையம் மற்றும் ரயில்-பஸ் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதையையும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரபடலாம் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    English Summary

    Work on constructing the skywalk connecting the Kilambakkam bus terminus and the railway station is proceeding rapidly. Officials plan to make it operational by November or December; if it opens before Diwali, that would be excellent news