கிளாம்பாக்கம் நடைமேம்பாலம் எப்போது திறப்பு? காத்திருக்கும் பயணிகள்.. தாமதம் ஏன்?

  • சென்னை: கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், ரயில் நிலையம் - பேருந்து நிலையத்தை இணைக்கும் நடைமேம்பாலமும் விரைவில் திறக்கப்பட வேண்டும் என்றும் பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர். இந்த சூழலில் இது தொடர்பாக பேசிய அதிகாரிகள், "ஜிஎஸ்டி சாலையில் பணிகள் மேற்கொள்வது மிகவும் கடினமான காரியம் எனவும், எனவே போக்குவரத்து குறைவாக இருக்கும் சனிக்கிழமை இரவுக்கு மேல் தொடங்கி ஞாயிற்றுக்கிழமையில் முடிக்கும் முயற்சியில் உள்ளோம்" என்றும் கூறினர்.

    Advertisement

    சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திற்கு பயணிகள் எளிதில் வந்து செல்ல ஏதுவாக கிளாம்பாக்கம் புறநகர் மின்சார ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்திற்கு பயணிகள் வருவதற்கு ஏதுவாக ஜிஎஸ்டி சாலைக்கு மேலே ஆகாய நடைபாதை அமைக்கவும் முந்தைய அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வந்தது.

    Advertisement

    கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம்

    280 மீ. நீளத்தில் மேற்கூரையுடன் கூடிய உயர்மட்ட நடைபாலம் அமைக்கும் பணி கடந்த 2024-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரூ. 79 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இந்த பணிக்கு நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஆனதால் நடை மேம்பாலம் அமைப்பதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மட்டும் முதல்கட்ட பணிகள் முடிந்துள்ளது.

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ரயில் நிலையத்திற்கு செல்லக்கூடிய ஜி.எஸ்.டி. சாலையின் குறுக்கே தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கமாக பணிகள் முடிந்துள்ளன. செங்கல்பட்டு - தாம்பரம் மார்க்கத்தில் 34 மீட்டரில் ஒரே நீளத்தில் அமைக்கப்படும் கம்பிகள் குறைந்த பட்சம் 200 டன் எடைக் கொண்டது. எனவே இந்தப் பணி முடிக்க இந்த மார்க்கத்தில் முழுவதும் போக்குவரத்தை நிறுத்த வேண்டியது அவசியம் ஆகும்.

    Advertisement

    பணிகள் முடிந்து எப்போது திறக்கப்படும்?

    இன்னொரு பக்கம் ரயில் நிலைய பணிகளும் இன்னும் முழுமை அடையாமல் உள்ளன. ரயில் நிலைய பணி, உயர்மட்ட நடை மேம்பாலம் பணியை தாமதமின்றி முடித்து விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். சென்னை நகருக்குள் இருந்து கிளாம்பாக்கம் வருவதற்கே சுமார் 2 மணி வரை நேரம் ஆகிறது. அதிலும் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை விடுமுறைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு கூடுதல் நேரம் செலவாகிறது.

    இதுவே ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வந்தால், போக்குவரத்து நெரிசல் இன்றி எளிதில் கிளாம்பாக்கம் வந்துவிடலாம். திட்டமிட்டபடி குறித்த நேரத்தில் ரயில்களில் வந்துவிட முடியும் என்பதால் பயணிகள் விரைவாக கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், ரயில் நிலையம் - பேருந்து நிலையத்தை இணைக்கும் நடைமேம்பாலமும் திறக்கப்பட வேண்டும் என்றும் பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

    Advertisement

    அதிகாரிகள் பதில்

    கடந்த ஆண்டே திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது பணிகள் நிறைவு பெறாததால் தாமதம் ஆனது. ஜூன், ஜூலை மாதங்களுக்குள் திறக்கப்பட்டு விடும் என்ற எதிர்பார்ப்பும் பயணிகள் மத்தியில் எழுந்தது. ஆனால் அப்போதும் தாமதம் ஆனது. தொடர்ந்து தாமதம் ஆகிக்கொண்டே வருவதால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, "செங்கல்பட்டு - தாம்பரம் மார்க்கத்தில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி மிகவும் சவாலானது.

    கடினமான காரியமாகும்

    இந்த மார்க்கத்தில் போக்குவரத்தை நிறுத்திதான் பணிகளை மேற்கொள்ள முடியும். ஜி.எஸ்.டி.சாலையில் எப்போதும் போக்குவரத்து பரபரப்பாக இருக்கும். இதனால், வார நாட்களில் இந்த பணிகளை செய்வது கடினமான காரியமாகும். எனவே போக்குவரத்து குறைவாக இருக்கும் சனிக்கிழமை இரவுக்கு மேல் தொடங்கி ஞாயிற்றுக்கிழமையில் முடிக்கும் முயற்சியில் உள்ளோம்" என்றார்.

    Advertisement

    தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் தாமதம் இன்றி கிளாம்பாக்கம் நடைமேம்பாலம் பணிகளை முடித்து விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    English Summary

    Kilambakkam Foot Overbridge: Passengers are eagerly awaiting the opening of the Kilambakkam suburban railway station and the foot overbridge connecting it to the bus terminus. Officials have now explained the reasons for the delay and shared when the facilities are expected to become operational.