தமிழ்நாடு ஆளுநராகும் கிரண்குமார் ரெட்டி? சந்திரபாபு நாயுடு பிளான்! உருவாகும் பாஜக தவெக கூட்டணி?

  • சென்னை: ஆந்திரா மற்றும் டெல்லி அரசியல் வட்டாரங்களில் கடந்த சில நாட்களாக ஒரு முக்கிய நகர்வு தீவிர விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான நல்லாரி கிரண்குமார் ரெட்டியைத் தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்க மத்திய தலைமை தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

    Advertisement

    இதன் பின்னணியில், கிரண்குமார் ரெட்டியின் உறவினரான அரசியல் ஆலோசகர் விஷ்ணு ரெட்டியின் சாதுரியமான வியூகம் அமைந்திருப்பதாக அரசியல் தளத்தில் பேசப்படுகிறது.

    Advertisement

    விஷ்ணு ரெட்டியின் வியூகம் என்ன?

    தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், ஆளுநர் மாளிகைக்கும் மாநில அரசுக்கும் இடையிலான உறவை சுமூகமாகப் பேணுவது ஆட்சி நிர்வாகத்திற்கு மிக அவசியமாகிறது. கிரண்குமார் ரெட்டிக்கு முதல்வர் விஜயுடன் தனிப்பட்ட முறையில் நல்ல நட்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், கிரண்குமார் ரெட்டி ஆளுநராக நியமிக்கப்பட்டால், அவர் தலைமைச் செயலகத்திற்கும் ஆளுநர் மாளிகைக்கும் இடையே ஒரு வலுவான மற்றும் நம்பகமான பாலமாகச் செயல்பட முடியும் என்பது விஷ்ணு ரெட்டியின் கணக்கு.

    Advertisement

    இதன்மூலம், ஆளுநர் தரப்பிலான அதிகார மையத்தின் வழியாக தவெக அரசுடனான தொடர்புகளையும் அணுகுமுறையையும் விஷ்ணு ரெட்டி தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, தமிழக அரசியல் அதிகார மையத்தில் தனது செல்வாக்கை நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    சந்திரபாபு நாயுடு வழி டெல்லி லாபி

    இந்தத் திட்டத்தை வெறும் ஆலோசனையோடு நிறுத்திவிடாமல், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கியத் தூணாக விளங்கும் ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடுவிடம் விஷ்ணு ரெட்டி தரப்பு கொண்டு சென்றதாகத் தெரிகிறது.

    மத்திய அரசில் தற்போது சந்திரபாபு நாயுடுவுக்கு இருக்கும் முக்கியத்துவத்தைப் பயன்படுத்தி, அவரது நன்மதிப்பு மற்றும் அதிகாரப்பூர்வ பரிந்துரை மூலமாக இந்த விவகாரம் டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

    Advertisement

    ஹைதராபாத் மற்றும் ஆந்திர அரசியல் வட்டாரங்களில் இருந்து டெல்லிக்கு அனுப்பப்பட்ட பரிந்துரைகளில், கிரண்குமார் ரெட்டி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகிய இருவரும் நிர்வாக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இணைந்து செயல்படக்கூடியவர்கள் என்பதால், இந்த நியமனம் டெல்லி மேலிடத்தின் தீவிர பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

    காங்கிரஸைப் பிரிப்பது; பாஜக பக்கம் திருப்புவது!

    டெல்லி தலைமையைக் கவரக்கூடிய வகையில் மிக நுணுக்கமான அரசியல் திட்டத்தை முன்வைத்தே இந்த காய்நகர்த்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது:

    காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தவெக-வை தனிமைப்படுத்துவது: பல ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியில் தலைவராகவும் முதல்வராகவும் இருந்து, அக்கட்சியின் செயல்பாடுகள் மற்றும் உள்விவகாரங்களை அக்குவேறு ஆணிவேறாக அறிந்தவர் கிரண்குமார் ரெட்டி. இதனால், தமிழக வெற்றிக் கழகத்தை காங்கிரஸ் தங்களது தேசியக் கூட்டணிக்குள் இழுக்க எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் முறியடித்து, தவெக தனித்தே நிற்பதை ஆளுநர் மாளிகை வழி ஆலோசனைகள் மூலம் அவரால் உறுதி செய்ய முடியும் என்று முன்வைக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தவெக-வை பாஜக அணிக்குள் கொண்டுவருவது: கள எதார்த்தத்திற்கு ஏற்ப, மாநில அளவில் விஷ்ணு ரெட்டி காய்நகர்த்தி, கொள்கை ரீதியாகவும் தேர்தல் வியூக ரீதியாகவும் தவெக-வை பாஜகவுடன் நெருக்கமாகக் கொண்டுவரும் பணிகளை ஒருங்கிணைப்பார்.

    மத்திய-மாநில நிர்வாக முரண்பாடுகளைக் களைவது, தவெக அரசை காங்கிரஸிடம் இருந்து தள்ளி வைப்பது, இறுதியாக பாஜக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் தவெக-வை நகர்த்துவது ஆகிய மூன்று இலக்குகளை உள்ளடக்கிய இந்த ஆந்திர பாணி வியூகம் டெல்லியில் எடுபடுமா என்பது விரைவில் ஆளுநர் மாளிகை அறிவிப்புகள் வரும்போது தெளிவாகும்.

    English Summary

    Kiran Kumar Reddy as TN Governor? The Inside Story of Chandrababu Naidu’s Recommendation