கிசான் விகாஸ் பத்திரத்தில் ரூ.25,000 முதலீடு.. டிரைவர், வேலைக்காரர் சேமிப்புக்காக ஓனரின் வேற லெவல்

  • சென்னை: சம்பளம் கொடுத்தால் மட்டும் போதுமா? தன்னிடம் நீண்ட காலமாக வேலை செய்யும் டிரைவர், வீட்டு பணியாளரின் எதிர்காலத்தைப் பற்றியும் யோசித்திருக்கிறார் ஒருவர்... அதனால் அவர்கள் 2 பேருக்குமே ஓய்வூதியம், பி.எஃப். போன்ற வசதிகள் இல்லை என்பதால், அவர்களது பெயரில் தலா ரூ.25,000 முதலீடு செய்துள்ளார். ஓனரின் இந்த மனிதநேயமான செயல்தான் இப்போது சோஷியல் மீடியாவில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    Advertisement

    நரேஷ் என்பவரின் வீட்டில் டிரைவர் ஒருவரும், வீட்டு பணியாளர் ஒருவரும், நீண்ட காலமாகவே பணியாற்றி வருகிறார்கள்.. இவர்களுக்கு எல்லாமே நரேஷ்தான்.. பல வருட காலம் தன்னிடம் வேலை பார்ப்பதால் அவர்களுக்குரிய சம்பளத்தை, சரியாகவே தந்து வந்தார் நரேஷ்..

    Advertisement

    மாத சம்பளம் - சேமிப்பு

    ஆனாலும் அவர்களின் எதிர்காலத்தை பற்றியும் யோசித்துள்ளார். பொதுவாக மாத சம்பளம் கிடைத்தாலும், வயதான காலத்தில் அவர்களுக்கு தொடர்ந்து வருமானம் கிடைப்பதற்கான ஓய்வூதியம் அல்லது பி.எஃப். போன்ற பாதுகாப்பு இல்லாமல் இருக்கலாம். இதை உணர்ந்த நரேஷ், அவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார்..

    இதற்காக டிரைவர் மற்றும் வீட்டு பணியாளர் இருவரின் பெயரிலும் தலா ரூ.25,000-ஐ கிசான் விகாஸ் பத்திரத்தில் முதலீடு செய்துள்ளார். இதனால் இருவருக்காகவும் ஆரம்பமாக மொத்தம் ரூ.50,000 சேமிப்பாகிறது. இந்தப் பணம் அவர்களது எதிர்காலத்தில் உதவியாக இருக்கும் என்பதுதான் நரேஷின் நோக்கம்.

    Advertisement

    கிசான் விகாஸ் பத்திரம்

    இத்துடன் நரேஷ் நிற்கவில்லை... இதுபோலவே ஒவ்வொரு வருடமும் தலா ரூ.25,000 என்ற அளவில் தொடர்ந்து முதலீடு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார். அதாவது, இது ஒருமுறை மட்டும் செய்யப்படும் உதவியாக இல்லாமல், அவர்களது எதிர்காலத்துக்கான நீண்ட கால சேமிப்பாக இருக்க வேண்டும் என்பதையும் அவர் நினைத்திருக்கிறார்.

    கிசான் விகாஸ் பத்திரத்தில் முதலீடு செய்யப்படும் தொகை குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு டபுளாகும்.. கிசான் விகாஸ் பத்திரத்தின் முதிர்வு காலம் 115 மாதங்கள், அதாவது சுமார் 9 ஆண்டுகள் 7 மாதங்கள். இதனால் ரூ.25,000 முதலீடு முதிர்வு காலத்தில் ரூ.50,000 ஆகும்.

    Advertisement

    டிரைவர், பணியாளருக்காக சேமிப்பு

    இந்த சம்பவத்தை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்துள்ள நரேஷ், 10 வருடங்களில் இந்தத் தொகை இரட்டிப்பாகும்.. தங்களிடம் நீண்ட காலமாக நம்பிக்கையுடன் பணியாற்றும் டிரைவர்கள், வீட்டு பணியாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களின் எதிர்காலத்தையும் மற்ற முதலாளிகளும் யோசித்தால் நன்றாக இருக்கும். பெரிய தொகை கொடுக்க முடியாவிட்டாலும், குறைந்தது ரூ.10,000-ல் இருந்தாவது அவர்களுக்காக சேமிக்கத் தொடங்கலாம்" என்றும் வேண்டுகோளை விடுத்துள்ளார்.

    சம்பளம் வாங்கி குடும்பத்தை நடத்துவது ஒரு பக்கம் என்றால், வயதான காலத்துக்காக பணத்தை சேமிப்பது இன்னொரு பக்கம். குறிப்பாக அமைப்புசாரா வேலைகளில் இருப்பவர்களுக்கு ஓய்வூதியம், பி.எஃப். போன்ற வசதிகள் இல்லாத சூழலில், அவர்களுக்காக வேலை கொடுக்கும் முதலாளியே எதிர்காலத்தை நினைத்துப் பார்ப்பது அவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும்.

    Advertisement

    ஓனர் செய்த தரமான சம்பவம்

    நரேஷின் இந்த முயற்சியை பார்த்ததுமே இணையவாசிகள் வியப்படைந்தனர்.. பலரும் அவரது செயலை பாராட்டியபடி உள்ளனர்.. நீண்ட காலமாக தங்களுக்காக உழைக்கும் ஊழியர்களின் எதிர்காலத்தையும் முதலாளிகள் இதுபோல் நினைத்துப் பார்க்க வேண்டும் என்றும் ஏராளமானோர் கமெண்ட்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.

    ஒருவருக்கு பணம் கொடுத்து உதவுவது மட்டுமல்லாமல், அந்தப் பணம் அவருடைய எதிர்காலத்துக்கு பயன்படும் வகையில் சேமிப்பாக மாற்றிக் கொடுத்திருக்கிறார் நரேஷ். தன்னிடம் வேலை செய்பவர்களின் இன்றைய தேவையை மட்டுமல்லாமல், நாளைய வாழ்க்கையையும் நினைத்த இந்த முயற்சிதான் தற்போது பேசுபொருளாகியுள்ளது. சூப்பர்ல...!!!

    English Summary

    Kisan Vikas Patra Investment of Rs 25,000.. Owner’s Unique Move to Secure Savings for Driver and Housekeeper