சென்னை: நகராட்சி அதிகாரிகள் நியமனத்தில் ரூ.634 கோடி முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில், கே.என். நேரு தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.. இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் என்ன முடிவெடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், தலைமை நீதிபதி இன்று நீதிமன்ற அமர்வில் பங்கேற்காததால் தீர்ப்பு அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது..
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனங்களுக்கு ரூ.634 கோடி லஞ்சம் பெறப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யும்படி தமிழக டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது.
இந்தக் கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி, அதிமுக எம்.பி. ஐ.எஸ். இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த பிப்ரவரி மாதம் அமலாக்கத் துறை கடிதத்தின் அடிப்படையில் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டது. தனது தரப்பு வாதங்களைக் கேட்காமலேயே வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டதாகக் கூறி, அந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நேரு தரப்பில், தனது தரப்பு வாதங்களைக் கேட்காமல் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டதால் தனது உரிமை பாதிக்கப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது. அதுமட்டுமல்லாமல், வழக்குப்பதிவு செய்யப் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி முந்தைய ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இப்போதைய அரசு திரும்பப் பெற முடியாது என்றும், அதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு தரப்பில், அதிகாரிகள் நியமன முறைகேடு தொடர்பாக ஆதாரங்களுடன் அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தும், முந்தைய திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் முன்னாள் அமைச்சர் கே.என். நேருவைப் பாதுகாத்ததாக வாதிடப்பட்டது. மேலும், வழக்குப்பதிவு செய்யக் கோரிய வழக்கில் நேருவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திப் பதிலளிக்காமல், போதிய அவகாசம் வழங்கப்படவில்லை என்று கூறி தற்போது மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 2 தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்குப்பதிவு செய்யப் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி கே.என். நேரு தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர். இந்த நிலையில், கே.என்.நேருவின் மறு ஆய்வு மனு மீது சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று காலை தீர்ப்பு வழங்கப்போவதாக செய்திகள் பரபரத்தன.. இதனால் வழக்குப்பதிவு செய்யப் பிறப்பிக்கப்பட்ட முந்தைய உத்தரவை நீதிமன்றம் மறு ஆய்வு செய்யுமா அல்லது அந்த உத்தரவு தொடருமா என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே எழுந்தது. இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி கே.என். நேரு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதும் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி இன்று நீதிமன்ற அமர்வில் பங்கேற்காததால், கே.என். நேரு தொடர்பான இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவில்லை.. இதையடுத்து, தீர்ப்பு அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், உயர்நீதிமன்றத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நீடிக்கிறது..கே.என்.நேரு தாக்கல் செய்த மறு ஆய்வு மனு
தமிழக அரசு வாதம்
இன்று தீர்ப்பு
தீர்ப்பு ஒத்திவைப்பு