கொடநாடு கேஸ் போலவே.. மர்ம வழக்காக மாறும் பழனி நிலமோசடி.. அதிர வைத்த மரணம்.. எதோ இடிக்குதே!

  • சென்னை: அரசியல் அதிகாரமும், பல நூறு கோடி மதிப்பிலான சொத்துகளும் இணையும் புள்ளிகளில் நடக்கும் மர்ம மரணங்கள் தமிழக அரசியலுக்குப் புதியவையல்ல. அதற்கு தற்போது புதிய எடுத்துக்காட்டாக பழனி நில மோசடி வழக்கு உருவெடுத்து உள்ளது!

    Advertisement

    அதிமுக ஆட்சிக்காலத்தில் ஒட்டுமொத்த மாநிலத்தையே உலுக்கிய கொடநாடு எஸ்டேட் வழக்கிலும், தற்போதைய தவெக ஆட்சியில் பேசுபொருளாகியிருக்கும் பழனி மடத்தின் நில மோசடி வழக்கிலும்.. நடக்கும் விஷயங்கள் கிட்டதே ஒரே மாதிரி சாயலை கொண்டுள்ளன.

    Advertisement

    கொடநாடு வழக்கு: தொடர் மரணங்கள்

    அதிமுக ஆட்சிக் காலத்தில், 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்குச் சொந்தமான 906 ஏக்கர் கொடநாடு எஸ்டேட்டில் அரங்கேறிய கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. காவல் பணியில் இருந்த ஓம் பகதூர் என்ற பாதுகாப்பு ஊழியர் படுகொலை செய்யப்பட்டதுடன் தொடங்கப்பட்ட இந்த வழக்கின் விசாரணை நகர்ந்த வேகத்தை விட, அதில் தொடர்புடையவர்கள் அடுத்தடுத்து மரணமடைந்த வேகம் பொதுமக்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    இந்த வழக்கில் நேரடியாகத் தொடர்புடையதாகக் கருதப்பட்ட ஐந்து நபர்கள் அடுத்தடுத்து மரணமடைந்தனர்:

    Advertisement

    1. கனகராஜ்: ஜெயலலிதாவின் முன்னாள் ஓட்டுநரும், முதல் குற்றவாளியுமான கனகராஜ், வழக்குப்பதிவு செய்யப்பட்ட சில நாட்களிலேயே சேலம் அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.

    2. சயனின் குடும்பம்: இரண்டாம் குற்றவாளியான சயன் பயணித்த கார் பாலக்காடு அருகே லாரி மீது மோதிய விபத்தில், அவரது மனைவியும் மகளும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்; சயன் படுகாயமடைந்தார்.

    3. தினேஷ் குமார்: கொடநாடு எஸ்டேட்டில் கணினி மற்றும் சிசிடிவி கண்காணிப்புப் பிரிவில் பணியாற்றிய தினேஷ் குமார், திடீரென தற்கொலை செய்துகொண்டதாக அறிவிக்கப்பட்டது.

    4. சந்தோஷ்: எஸ்டேட்டின் மற்றொரு ஊழியரான சந்தோஷும் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார்.

    Advertisement

    ஒரு கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து, அதில் தொடர்புடைய முதன்மைச் சாட்சிகளும் குற்றவாளிகளும் அடுத்தடுத்து விபத்துகள் மற்றும் தற்கொலைகள் மூலம் மரணமடைந்தது, வழக்கின் உண்மையான பின்னணியை மூடி மறைக்க நடந்த சதியோ என்ற கேள்வியை வலுவாக எழுப்பியது.

    பழனி கோயில் நில வழக்கு: மீண்டும் ஒரு மர்ம மரணம்

    தற்போது, பழனியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான சுமார் ₹100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலம், போலி ஆவணங்கள் மூலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் புகாரைத் தொடர்ந்து சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வரும் இந்த வழக்கில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் வழக்கறிஞர் அன்வர்தீன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

    Advertisement

    ஆனால், கொடநாடு வழக்கை நினைவூட்டும் விதமாக, இந்த வழக்கிலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட முக்கிய குற்றவாளியான வழக்கறிஞர் அன்வர்தீன் (65), விசாரணை முடிந்து சிறைக்கு மாற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே மூச்சுத்திணறல் மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில், மற்றொரு முக்கிய குற்றவாளியான சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனும் திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

    ஒப்பீடு

    கொடநாடு வழக்கிற்கும் பழனி நில வழக்குக்கும் இடையே பல திடுக்கிடும் ஒற்றுமைகள் காணப்படுகின்றன:

    கொடநாடு எஸ்டேட்டின் பின்னணியில் நூற்றுக்கணக்கான கோடிகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் புதைந்திருந்ததாகக் கூறப்பட்டதைப் போலவே, பழனியிலும் ₹100 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் மையப்புள்ளியாக உள்ளது.

    Advertisement

    கொடநாட்டில் முதன்மைச் சந்தேக நபர்கள் விபத்து என்ற பெயரில் மரணமடைந்தனர். பழனியில், சிபிசிஐடி காவலில் விசாரிக்கப்பட்ட நபர் சிறைக்குத் திரும்பிய உடனே மரணமடைந்துள்ளார்.

    கொடநாடு விவகாரத்தில் அன்றைய ஆளும்கட்சி மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியதைப் போலவே, தற்போதைய பழனி விவகாரத்திலும் உயர் மட்டப் பின்னணியை மறைக்கவே இந்த மரணம் நிகழ்ந்துள்ளதா என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன.

    English Summary

    Kodanad to Palani: Mysterious and High-Profile Land Scams in Tamil Nadu Politics