சென்னை: கொளத்தூர் சட்டசபை தேர்தல் தொடர்பாக திமுக தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவி பேடுகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக திமுக புகார் சொன்ன நிலையில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த வழக்கை திரும்ப பெற்று புதிய மனு தாக்கல் செய்ய ஸ்டாலின் தரப்பு அனுமதி கோரிய நிலையில் வழக்கை திரும்ப பெறவும் நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர்.
2026 தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். அதே தொகுதியில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளராக விஎஸ் பாபு களம் இறங்கினார்.
வாக்கு எண்ணிக்கையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 8795 வாக்குகள் வித்தியாசத்தில் விஎஸ் பாபுவிடம் தோல்வியடைந்தார். இந்த நிலையில் கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 14 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மறு ஆய்வு செய்ய மு.க.ஸ்டாலின் முறையிட்டிருந்தார். அதன்படி சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்களை சரி பார்க்கும் பணி கடந்த ஜூலை 29ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 8 நாட்கள் இந்த பணியானது நடைபெற்ற நிலையில் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சீல்கள் சரியாக இல்லை எனவும், சில இயந்திரங்களில் புதிதாக டேக் ஒட்டப்பட்டு இருந்ததாக திமுக குற்றம் சாட்டியது. மேலும் ஐந்து இயந்திரங்களில் பிரச்சினை இருப்பதாகவும், இதுதொடர்பாக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக திமுக வழக்கறிஞர் என்ஆர் இளங்கோ கூறியிருந்தார். தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அப்போது சரிபார்ப்பின் போது வாக்குப்பதி இயந்திரங்கள் கோளாறுடன் இருந்ததாகவும், 6 வாக்குச்சாவடிகள் வாக்குப்பதிவு இயந்திரங்களும் விவி பேட் சீட்டுகளும் பல்வேறு முறைகேடுகளுக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளதால் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களையும் சரிபார்க்க வேண்டும் எனவும், அதுவரை விஎஸ் பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும் என கூறிய கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி தர்மாதிகாரி - அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராகி வாதிட்டார். ஒப்புகை சீட்டு இயந்திரங்களை சரிபார்க்க வேண்டும் என தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு மே 7ஆம் தேதி விண்ணப்பித்தனர். ஆனால் தேர்தல் வழக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவான 45 நாட்களுக்கு பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டதால் வழக்கு தாக்கல் செய்வதை தவிர வேறு நிவாரணம் இல்லை என தங்கள் தரப்பு வாதத்தை முன் வைத்தார். அதே நேரத்தில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க கூடாது என தேர்தல் ஆணையம் வாதிட்டது. தேர்தல் ஆணையத்தின் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் மனுவில் கோரிக்கைகள் விசாரணைக்கு உகந்தவை அல்ல எனவும், எம்எல்ஏவின் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி தேர்தல் வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும். இந்த மனுவை விசாரணைக்கு எடுத்தால், இதே போல பலரும் வழக்குகள் தாக்கல் செய்வார்கள் என கூறப்பட்டது. இந்த நிலையில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தர்மதிகாரி அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு மனு மீதான தீர்ப்பை ஒத்தி வைத்தனர். அதே நேரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்த வழக்கில் 225 ஆம் ஆண்டு முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியது. இதை எடுத்து தற்போது தாக்கல் செய்த வழக்கை திரும்ப பெற்று புதிய வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தரப்பு கோரிய நிலையில், அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கை திரும்ப பெற அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.