வி.எஸ்.பாபு உடல்நலம் குறித்து வெளிப்படைத்தன்மை இல்லை! இது அரசுக்கு அழகல்ல! - கிருஷ்ணசாமி

  • சென்னை: கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வி.எஸ்.பாபு உடல்நலம் குறித்து வெளிப்படைத்தன்மை இல்லாமல் வைத்திருப்பது, அரசுக்கும் அழகல்ல; மருத்துவமனைக்கும் மாண்பல்ல என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறியிருக்கிறார்.

    Advertisement

    இது குறித்து அவர் தனது பேஸ்புக் பதிவில், "கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வி.எஸ்.பாபு நோய்வாய்ப்பட்டு, செப்டம்பர் 09 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, ஏறக்குறைய ஒரு மாத காலம் ஆகப் போகிறது.

    Advertisement

    அவசர நோயாளியாகச் சேர்க்கப்பட்ட அவருக்கு மூச்சு திணறல் மற்றும் நுரையீரல் கோளாறு இருப்பதாக, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஓரிரு நாளில் அம்மருத்துவமனையின் செய்திக் குறிப்பு மூலமாகத் தெரியவந்தது. அதற்குப் பிறகு ஓரிரு முறை 'முன்னேற்றம்' என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு அறிக்கைகள் வெளிவந்தன.

    அவர் ஒரு 'சாதாரணமான குடிமகன்' என்று சொன்னால், அவரது உடல்நிலை குறித்து பொதுவெளியில் தெரிவிக்க வேண்டிய அவசியம் இருக்காது; ஆனால், அவர் மக்கள் பிரதிநிதி; கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர். எனவே, அவருடைய உடல்நலம் குறித்து அவரது சட்டமன்றத் தொகுதி மக்களுக்கும், பொது மக்களுக்கும் அரசு தெரிவித்தாக வேண்டும்.

    Advertisement

    அவர் ஒன்றும் பெரிய வசதி படைத்த குடும்பத்தைச் சார்ந்தவர் அல்ல. சென்னையிலேயே உயர்தர சிகிச்சையளிக்கும் அரசு மருத்துவமனை உண்டு. எனினும் அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தொடரப்படுகிறது. அவருடைய மருத்துவ செலவீனங்களை அரசு ஏற்றுக் கொள்கிறதா? குடும்பமா? அல்லது கட்சியா? என்பது குறித்தும், அவருடைய தற்போதைய உடல்நலம் குறித்தும் தொடர்ந்து வெளிப்படைத்தன்மை இல்லாமல் வைத்திருப்பது மருத்துவமனைக்கும் மாண்பல்ல; அரசுக்கும் அழகல்ல.!

    கடந்த சில வருடங்களுக்கு முன்பு, ஒரு முக்கியமான தலைவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்துப் பல்வேறு விதமான விமர்சனங்களும், அதை விசாரிக்கவே ஒரு நீதிபதி தலைமையில் ஆணையமும் அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

    Advertisement

    எனவே, அவருக்கு இப்போது அளிக்கப்படக்கூடிய சிகிச்சை அவர் முழுமையாகக் குணம்பெற்றுத் திரும்புவதற்கு உண்டான வகையில் இருக்கிறதா? இல்லை, இங்கு அதற்கான சிகிச்சை இல்லாதபோது, அரசினுடைய செலவிலேயே வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளிக்க வேண்டிய சூழல் இருக்கிறதா? என்பது குறித்து தமிழ்நாடு அரசு ஒரு வெள்ளை அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்.

    இதுபோன்று நாட்கணக்கில், மாதக்கணக்கில் மக்கள் பிரதிநிதிகளை மருத்துவமனைகளில் 'சிகிச்சை' என்ற பெயரில் தொடர்ந்து கமுக்கம் காத்து வருவது முறையானதல்ல. எனவே, தமிழ்நாடு அரசு அவரது இன்றைய உடல்நலம், அவருக்கு மேற்கொண்டு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை, அதற்காக அரசு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    Kolathur MLA Health Row: Kolathur Assembly Constituency Member VS Babu's non-transparency about his health, Government is also not beautiful; New Tamil Nadu Party President Krishnasamy has said that the hospital is not honorable either.