சென்னை: கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகம் எம்.எல்.ஏ விஎஸ் பாபு உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக அனுமதிக்கப்பட்ட விஎஸ் பாபு உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை கொளத்தூர் தொகுதியில் மு.க ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர் விஎஸ் பாபு. தவெக எம்.எல்.ஏவான இவருக்கு கடந்த 9 ஆம் தேதி அதிகாலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் குடும்பத்தினர் உடனடியாக சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவரை ஐசியூவில் அனுமதித்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஓரிரு நாட்களில் உடல் நலம் தேறி வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஎஸ் பாபு உடல் நிலையை தீவிரமாக மருத்துவர்கள் கண்காணித்து வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியானது. இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் விஜய்யும் விஎஸ் பாபு உடல் நிலை பற்றி போனில் கேட்டறிந்ததாக அமைச்சர் அருண்ராஜ் கூறியிருந்தார். விஎஸ் பாபு உடல் நிலை பற்றி கடந்த மூன்று நாட்களாக எந்த வித அப்டேட்டையும் மருத்துவமனை தரப்பில் இருந்து வெளியிடப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், விஎஸ் பாபு உடல் நிலை பற்றி புதிய அறிக்கை ஒன்றை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், விஎஸ் பாபு உடல்நிலை சீராக உள்ளது எனவும், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.