கோயம்பேடு டூ நந்தம்பாக்கம்.. நவம்பரில் வருகிறது சென்னை மெட்ரோ சோதனை ஓட்டம்.. டிரைவர் இல்லாத ரயிலா?

  • சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு முக்கியமான மாற்றம் வரப்போகிறது. கோயம்பேடு முதல் நந்தம்பாக்கம் வரையிலான புதிய மெட்ரோ பாதையில் வரும் நவம்பர் மாதம் சோதனை ஓட்டத்தை தொடங்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

    Advertisement

    சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் பல்வேறு பகுதிகளில் மும்முரமாக நடந்து வருகின்றன.

    Advertisement

    சென்னை மெட்ரோ

    இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 3 வழித்தடங்களில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாதவரம் பால் பண்ணை முதல் சிப்காட் வரை 45.8 கி.மீ., கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26.1 கி.மீ. மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ. என மொத்தம் 119 மெட்ரோ நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த முழு திட்டத்திற்கும் ரூ.63,246 கோடி மதிப்பிடப்பட்டுள்ளது.

    இதில் மாதவரம் - சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் இடம்பெறும் கோயம்பேடு - நந்தம்பாக்கம் பகுதியில் இப்போது அனைவரின் கவனமும் குவிந்துள்ளது.. சுமார் 26 கி.மீ. நீளமுள்ள இந்தப் பகுதியில் பெரும்பாலான கட்டுமானப் பணிகள் முடிந்துவிட்டன. முக்கியமாக, ரயில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் சுமார் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

    Advertisement

    கோயம்பேடு நிலையம், முகலிவாக்கம் மற்றும் ஈரடுக்குப் பாதை தொடர்பான பகுதிகளில் மட்டும் சுமார் 1.5 கி.மீ. அளவிலான பணிகள் மிச்சமுள்ளன.. இவைகளையும் சீக்கிரமாக முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.. மீதமுள்ள பணிகளை அடுத்த 10 நாட்களுக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    நவம்பரில் கோயம்பேடு முதல் நந்தம்பாக்கம் வரை

    இதையடுத்து நவம்பரில் கோயம்பேடு முதல் நந்தம்பாக்கம் வரையிலான பாதையில் மெட்ரோ ரயிலை இயக்கி சோதனை செய்யப்பட உள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ரயில் சேவை வருவதற்கு முன்பு இந்த சோதனை ஓட்டம் சுமார் 4 மாதங்கள் நடைபெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்த புதிய வழித்தடத்தின் இன்னொரு ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்கள் ஆகும். தானியங்கி முறையில் இயக்கப்பட உள்ள இந்த ரயில்களுக்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகள் மற்றும் ஸ்பெஷலான சாப்ட்வேர்கள் பொருத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

    இதனிடையே, நந்தம்பாக்கம் வர்த்தக மையம் முதல் ஆலந்தூர் வரையிலான 3.6 கி.மீ. இணைப்புப் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அடுத்த 45 முதல் 60 நாட்களுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பெரிய ரிலீஃப்

    இந்த இணைப்புப் பணி முடிந்ததுமே கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான முழுமையான மெட்ரோ பாதையை பயன்படுத்தும் வாய்ப்பு பயணிகளுக்கு கிடைக்கும். அடுத்த வருடம் முதல் இந்த முழு வழித்தடத்திலும் சேவை தொடங்கும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    Advertisement

    சென்னையில் இந்த புதிய பாதை செயல்பாட்டுக்கு வரும்போது, பயணிகளின் போக்குவரத்து நேரம் குறைவதுடன், சாலைப்போக்குவரத்து நெரிசலுக்கும் ஓரளவு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது...!!

    English Summary

    Koyambedu to Nandambakkam.. Chennai Metro Trial Run to Begin in November.. Will the Trains Be Driverless?